ஜிம்பாவே நாட்டில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் ஒரு குழுவினர் சுற்று பயணம் மேற்கொண்டனர். அவர்களை இன்னொசென்ட் என்பவர் வழிகாட்டியாக நடத்தி சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் வழிநெடுக மிருகங்களை பார்த்து கொண்டு வந்து கொண்டிருந்தபோது, ஒரு அரிய காட்சியை கண்டார்கள். ஒரு யானைக்குட்டியை பதினான்கு சிங்கங்கள் சூழ்ந்து கொண்டு அதை கொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தன.
அந்த காட்சியை அவர்கள் வீடியோ படம் எடுக்க ஆரம்பித்தனர். பதினான்கு சிங்கங்களில் மற்றவை சூழ்ந்து நிற்க, இரண்டு சிங்கங்கள் யானைக்குட்டியின் பின்பக்கத்தை கடித்து குதற முயற்சி செய்ய ஆரம்பித்தன…
வந்திருந்த குழுவினர் அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய நினைத்தாலும், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாத நிலைமை! செய்யவும் கூடாது. ஏனென்றால் சிங்கங்கள் அவர்களை பதம் பார்த்து விடும். பரிதாபத்துடன் சிங்கங்கள் யானைக்குட்டியை தாக்க முயற்சிப்பதை பார்த்து கொண்டிருந்தனர். சிங்கங்கள் பின்பக்கமாக தாக்க முயன்றபோது, யானைக்குட்டி உதறி தள்ளி தப்பித்தது.
மீண்டும் அவை தாக்க முற்படும்போது, அவைகளை முட்டி தள்ளிற்று. மாறி மாறி நடந்த போராட்டத்தில் கடைசியில் யானைக்குட்டி விரட்ட சிங்கங்கள் தோற்றுப்போய் ஓடிப்போக தொடங்கின. கடைசியில் யானைக்குட்டி வெற்றி பெற்றது.
தனது முப்பது வருட வழிகாட்டி வேலையில் இதுதான் முதல்முறை இப்படி சிங்கங்கள் தோல்வியுற்றதை கண்டதாக இன்னொசென்ட் கூறினார். அந்த தைரியமான பலசாலியான யானைக்குட்டிக்கு ஹெர்குலிஸ் என்று பெயரிட்டனர்.
“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1பேதுரு 5:8)என்று வேதத்தில் வாசிக்கிறோம். அப்படி பிசாசானவன் சிங்கங்கள் யானைக்குட்டியை தாக்குவது போல கிறிஸ்துவை பின்பற்றுபவர்களை தொடர்ந்து வந்து தாக்க முயற்சிப்பான். ஆனால் அவனுக்கு எதிர்த்து நிற்கும்போது, நிச்சயமாக நாம் பெலனற்றவர்களாக இருந்தாலும் கிறிஸ்து நமக்கு கேடகமாக இருப்பதால் நாம் அவனை மேற் கொள்ள முடியும்.
நாம் நம்முடைய பெலத்தை மட்டும் சார்ந்து சத்துருவுடன் போரிட முடியாது. கர்த்தiர் சார்ந்து நாம் அவனை எதிர்த்து நிற்கும்போது, அவனை எளிதில் மேற்கொள்ள முடியும். சத்துருவானவன் வெள்ளம் போல வரும்போது ஆவியானவர் அவனுக்கு எதிராக கொடி ஏற்றுவார். அவனை மேற்கொள்ள பெலன் தருவார்.
கர்த்தருக்குள் இன்னும் அதிகமாக வளர வேண்டும், அவருக்காக கனிகொடுக்க வேண்டும், அவருக்காக வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிற ஒவ்வொருவரையும் விழுங்கும்படியாக, சத்துரு சுற்றி திரிந்தாலும், யானைக்குட்டி தனி ஆளாக சிங்கங்களை விரட்டி அடித்ததுப்போல நாம்; தேவனோடு இருந்தால் அவனை விரட்டி அடிக்க முடியும். வெற்றி என்றும் நமக்கே! ஆமென் அல்லேலூயா!
அந்தகார வல்லமைகளை 
தேவ பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கே என்றும்
பயமில்லை வெற்றி எனக்கே
போராயுதம் தரிப்பேன் 
போர் செய்வேன் போர் செய்வேன்
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சத்துருவை எதிர்த்து நிற்கும்படியாக எங்கள் ஒவ்வொருவரையும் பலப்படுத்தும். யுத்தத்திற்கு எங்கள் கைகளை பழக்குவிக்கிறவரே சத்துருவோடு நாங்கள் செய்யும் யுத்தத்தில் யெகோவாநிசியாக நீர் எங்களோடு இருந்து வெற்றி பெற செய்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஒவ்வொருவரையும் சத்துருவின் மேல் வெற்றி பெற செய்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.