Saturday 1 October 2016

பிரிந்த யோர்தான் நதி

சம்பவிப்பது என்னவென்றால், சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் குவியலாக நிற்கும் என்றான். – (யோசுவா 3:13).

இஸ்ரவேலர் தங்களுடைய அவிசுவாசத்தினால் 40 வருடங்கள் வனாந்தரத்தில் சுற்றி அலைந்து, கடைசியில் கானானை சுதந்தரிக்க போகும் நேரத்தில் அவர்களுக்கு முன்பாக தடையாக நின்றது யோர்தான் நதி. கில்காலிலிருந்து அதை கடப்பது மிகவும் எளியது ஏனெனில் அது 100 அடி அகலமானது மட்டுமே. ஆனால் மனிதன் தன்னை குறித்து மேன்மை பாராட்ட கூடாதபடி, தேவன் அறுப்புக்காலத்தில் அதை கடக்கும்படி செய்கிறார். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம் என்று வேதம் கூறுகிறது. கரைபுரண்டு போகும் யோர்தானை கரை கடப்பது மிகவும் ஆபத்தானது. எப்போதும் இருப்பதை விட 50 மடங்கு அதிக ஆழமாக இருக்கும் அந்த நேரத்தில் அவர்கள் அதை கடப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒரு காரியமாகும். அவர்களுக்கு அந்த வேளையில் தேவனுடைய உதவி அவசியமானதாக, அத்தியாவசியமானதாக இருந்தது.
நாமும் கூட பரம கானானை சேர்ந்து விடமுடியாதபடி, நமக்கு எதிராக சாத்தானின் உபாய தந்திரங்களும், பாவங்களும் நம்மை அப்படியே உலக வாழ்வில் மூழ்கடித்துவிட தயாராக இருக்கின்றன. அவை நம்மை மூழ்கடிக்க நினைத்தாலும் அப்படி மூழ்கி விடாதபடி தேவன் நம்மை காத்து கொள்ள வல்லவராயிருந்து நம்மை கரைசேர்க்கிறார்.
இந்த அதிகாரத்தில் ஏழு முறை உடன்படிக்கை பெட்டி என்ற வார்த்தை வருகிறது. உடன்படிக்கை பெட்டி என்பது மகா பரிசுத்தமுள்ள தேவன் எழுந்தருளும் இடமாகும். அவர் வாசம் செய்யும் இடமாகும். அதை ஆசாரியர்கள் மாத்திரமே சுமக்க வேண்டும். இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்யும் தேவன், அந்த உடன்படிக்கை பெட்டியோடு கூட வல்லமையாக, தம் அற்புத செயல்களை வெளிப்படுத்தும்படியாக, மற்ற புறஜாதியார் கண்டு வியக்கும்வண்ணமாக, தேவன் இஸ்ரவேலரோடு இருக்கிறார் என்பதை அவர்கள் காணும் வண்ணமாக, அவர்களை இஸ்ரவேலருக்கு முன்பாக துரத்திவிட்டு, இஸ்ரவேலருக்கு வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்தை கொடுக்கும்படியாக வல்லமை விளங்கும் பெட்டியை ஆசாரியர்கள் தூக்கி கொண்டு, அந்த யோர்தான் நதியில் கால்களை வைக்கும்போது, யோர்தான் இரண்டாக பிளந்து, தேவ ஜனங்கள் அதன் உலர்ந்த தரைவழியாக செல்லும்படியாக உடன்படிக்கை பெட்டி அவர்களுக்கு முன்பாக சென்றது.
இந்த இடத்தில் நாம் ஒரு காரியத்தை பார்க்க வேண்டும். மோசே சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்த போது, தன் கையிலுள்ள கோலை வானத்திற்கு நேராக உயர்த்திய போது, அந்த கடல் இரண்டாக பிளந்தது. இஸ்ரவேலர் உலர்ந்த தரைவழியாக நடந்து சென்றனர். ஆனால் இங்கோ, ஆசாரியர்கள் அந்த கரைபுரண்டு வரும் யோர்தான் நதியில் தங்கள் காலடிகளை வைக்க வேண்டும். அப்போதுதான் யோர்தான் இரண்டாக பிளக்கும். சிலவேளைகளில் தேவன் நாம் விசுவாசத்தோடு அவர் சொல்லும் காரியத்தை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். அப்படி செய்யும்போது அற்புதம் நடக்கிறது. இயேசுகிறிஸ்துவிடம் குஷ்டரோகமுள்ள பத்து பேர், எங்களுக்கு இரங்கும் என்று அவரை நோக்கி சத்தமிட்டார்கள். அவர்களை இயேசுகிறிஸ்து ‘பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்’ (லூக்கா 17:14) என்று வேதம் கூறுகிறது.
ஒருவேளை அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கலாம். அவர் அவர்களை தொட்டு சுகப்படுத்துவார் என்று, ஆனால் அவர் அவர்களுக்கு சொன்னார், ஆசாரியர்களுக்கு உங்களை காண்பியுங்கள் என்று. அப்படி அவர்கள் போகும்போதே அவர்கள் சுத்தமானார்கள். ஒருவேளை அவர்கள் போகாதிருந்தால், அவர்கள் சுத்தமடையாதிருந்திருப்பார்கள். தேவன் நம்மையும் கூட அப்படி விசுவாச அடி எடுத்து வைக்க சிலவேளைகளில் எதிர்ப்பார்க்கிறார். நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் (2 கொரிநதியர் 5:6) என்று வேதம் கூறுகிறது. அப்படியாக நாம் விசுவாசத்தோடு நடக்கும்போது, கர்த்தர் நமக்கு உதவிக்கு வருகிறார்.
அந்த ஆசாரியர்கள் கரைபுரண்டு ஓடி கொண்டிருந்த யோர்தான் நதியில் காலடி எடுத்து வைத்தவுடனே அற்புதம் நடந்தது. ‘பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர் வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது: உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று: அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்’. அல்லேலூயா!
உங்களுக்கு முன்பாக யோர்தான் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல பிரச்சனைகள் தலைக்கு மேலாக போய் கொண்டிருக்கிறதோ? முதலாவது உங்களை கர்த்தருடைய வார்த்தையின்படி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உங்களை கழுவி கொண்டு, விசுவாசத்தோடு, உங்கள் காலடிகளை எடுத்து யோர்தான் நதியில் வையுங்கள். யாருக்கு யோர்தான் நதி வழிவிடும் என்றால், உடன்படிக்கை பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களுக்கே! அந்த காலத்தில் அநேக ஆசாரியர்கள் இருந்திருக்கலாம், ஆனால், உடன்படிக்கை பெட்டியை சுமக்கிற ஆசாரியர்கள் கால்கள் பட்டவுடன் மாத்திரமே யோர்தான் பிரிந்தது.
‘நம்மிடத்தில் அன்புகூர்ந்து,தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்’ – (வெளிப்படுத்தின விசேஷம் 1:6) என்ற வசனத்தின்படி, கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நாம் யாவரும் ஆசாரியர்களும் ராஜாக்களுமாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் கர்த்தருடைய உடன்படிக்கை சுமக்கிறவர்களுக்கே அற்புதம் நடைபெறுகிறது. கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி, தேவ பிரசன்னம் நிறைந்த இடம். அதாவது துதி நிறைந்த இடம். ஆராதனையின், துதியின் மத்தியில் வாசம் செய்யும் தேவ பிரசன்னம் நிறைந்த இடம் தான் இப்போதைய உடன்படிக்கை பெட்டி! ஆசாரியர்கள் என்னப்பட்ட நாம் அவரை துதிக்கிறவர்களாக, கர்த்தருடைய வார்த்தையின்படி துதிக்கிறவர்களாக, அவருடைய வார்த்தையின்படி, விசுவாசத்தோடு காலடி எடுத்து வைக்கும்போது, நிச்சயமாக அதிசயம் நடக்கும். துதிக்கிறவன் முன்னால் எப்பேற்பட்ட படையும், எப்பேற்பட்ட வெள்ளம் கரைபுரண்டோடும் யோர்தானும் நின்று வழிவிடும். ஆமென் அல்லேலூயா!
விசுவாசத்தோடு கர்த்தர் உங்களுக்கு சொல்வதை செய்யுங்கள். நீங்கள் அவருடைய வார்த்தையின்படி செய்தால், நிச்சயமாக மற்றவர்கள் கண்டு அதிசயிக்கும்படியாக, பெரிய அற்புதத்தை உங்கள் வாழ்வில் செய்வார். யோர்தான் நதி உங்களுக்கு வழி கொடுக்கும். நீங்கள் உலர்ந்து தரை வழியாக நடந்து போவது போல கடந்து போவீர்கள். பரம கானானை பத்திரமாக சென்றடைய கர்த்தருடைய பிரசன்னம் உங்களோடு கடந்து வரும். அல்லேலூயா!
யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
ஜெபம் : எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, யோர்தான் போன்ற சோதனைகளும், பிரச்சனைகளும் எங்களை தாக்க வரும்போது, நாங்கள் கர்த்தரின் சமுகத்தில் அவருடைய பிரசன்னத்தோடும், அவருடைய வழிநடத்துதலோடும் கர்த்தரை துதிக்கும் துதியோடும், விசுவாசத்தோடு காலடி எடுத்து வைத்து, வெற்றியை எடுத்து கொள்ள கிருபை பாராட்டும். யோர்தான் நதி எப்படி ஆசாரியர்கள் காலடி வைத்த உடனே இரண்டாக பிரிந்ததோ, அதை போல தேவ ஜனமாகிய நாங்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆசாரியர்களாகிய நாங்கள் துதியின் சத்தத்தோடும், விசுவாசத்தோடும் கர்த்தரை பற்றி கொண்டு, யோர்தானின் அனுபவங்களை மேற்கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment