Saturday 1 October 2016

ரெகொபோத் – Rehoboth

பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். – (ஆதியாகமம் 26:22).


ஈசாக்கு துரவை வெட்டியபோது அங்கு அவனுக்கும் அங்கிருந்த மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்த காலத்தில் ஈசாக்குக்கு இருந்த ஆட்டு மந்தைகளுக்கும் மாட்டு மந்தைகளுக்கும் நீர் கொடுக்க அவனுக்கு அந்த நேரத்தில் நல்ல தண்ணீர் சுரக்கும் துரவு மிகவும் அத்தியாவசிய தேவையாயிருந்தது. அது இல்லாதபடிக்கு அவனுடைய மந்தைகள் மரித்து போகும். அதனால் அவன் மூன்று துரவுகளை (கிணறுகளை) தொடர்ந்து தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

‘தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்’  (வசனம் – 18). ஈசாக்கு பெலிஸ்தர் தூர்த்து போட்ட தன் தகப்பனுடைய துரவுகளை மீண்டும் தோண்டியபோது, பெலிஸ்தர்கள் அதை குறித்து வாக்குவாதம் பண்ணவில்லை. பெலிஸ்தர்கள் நினைத்திருப்பார்கள், ஆபிரகாம் இறந்த பிறகு இந்த துரவுகளுக்கு யார் சொந்தம் பாராட்டி வருவார்கள் என்று. ஆனால், ஈசாக்கு அவைகளை மீண்டும் தோண்டி அவைகளை பயன்படுத்த ஆரம்பித்தான்.

ஒரு நல்ல ஊழியக்காரரின் தரிசனங்களும் செயல்பாடுகளும் கூட அவர் மரித்தப்பின் அப்படியே போய் விடக்கூடாது. அது தொடர்ந்து செயல்பட வேண்டும். மோசேயின் தலைமைத்துவத்துவத்தை யோசுவா தொடர்ந்ததுப்போல, எலியாவின் தரிசனத்தை எலிசா தொடர்ந்தது போல, நல்ல ஊழியரின் தரிசனங்கள் அவர்கள் மரிக்கும்போது, அவர்களோடு மண்ணோடு மண்ணாக போய் விடாமல் அவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தன் தகப்பனின் துரவுகளை ஈசாக்கு தோண்டியபோது, அதை குறித்து வாக்குவாதம் செய்யாதவர்கள், அவன் புதிய துரவுகளை தோண்ட ஆரம்பித்த போது வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். பழைய ஊழியரின் தரிசனங்கள் நல்லதுதான், ஆனால் தேவன் புதிய தரிசனங்களோடு கூட நாம் செயல் பட வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கிறார். அப்போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவைகளையும் மீறி நாம் செயலாற்ற வேண்டும். ஐயோ, எதிர்ப்புகள் வருகிறதே என்று ஒன்றுமே செய்யாமல் இருக்கும்போது, அதினால் எந்த பயனுமில்லை.

நீங்கள் செயலாற்றி செல்லும்போதுதான் தேவனும் ஆசீர்வதிகக ஆரம்பிக்கிறார். ‘பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய்,  வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்’ என்று பார்க்கிறோம். அவன் எதிர்ப்புகளை கண்டு சோர்ந்து போகாமல், முன்னோக்கி சென்று துரவை வெட்டினபோது, அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை. அப்போது தேவன் அவனை ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார். அவன் மகிழ்ந்து தேவன் அவர்களுக்கு இடம் உண்டாக்கினார் என்று அந்த துரவிற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான்.

கர்த்தருக்காக காரியங்களை புதிய தரிசனத்தோடு செய்யும் போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் மனம் தளராமல் கர்த்தருக்காக காரியங்களை செய்யும்போது, ஒரு நாள் வரும், எதிர்ப்பவர்கள் வாயடைத்து போவார்கள். தேவன் உங்களை பலுக செய்வார். அப்போது நீங்களும் ஆனந்தமாக ரெகொபோத் என்று ஆண்டவரை துதிக்க முடியும். ஆமென் அல்லேலூயா!

ஜெபம் : எங்கள் கன்மலையும் மீட்பருமாகிய நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். அப்பா, நீர் கொடுக்கிற புதிய தரிசனங்களை நாங்கள், எங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகளை மீறி உமக்கென்று காரியங்களை சாதிக்க எங்களுக்கு உதவும்.  எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நீர் எங்களோடு கூட இருக்கிறீர் என்றும், எங்களை பலுக செய்வீர் என்றும் விசுவாசத்தோடும் புதிய நம்பிக்கையோடும் நாங்கள் உற்சாகமாக காரியங்களை செய்ய தேவன் தாமே எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ரெகொபோத்தை கொடுத்து, எங்களை ஆசீர்வதிப்பீராக.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment