Saturday 1 October 2016

பொறுமையாயிருப்போம்

ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும். பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. – ( தீத்து 3:2).

2014ஆம் ஆண்டு தென் கொரியாவின் இன்ச்சானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட அநேகரில் சரிதா தேவியும் ஒருவர். இவர் அறுபது கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை வீராங்கனையாவார். இவருக்கும தென் கொரியாவின் ஜீனா பார்க் என்பவருக்குமிடையே அரையிறுதிப் போட்டி நடந்தது. அதில் சரிதாவுக்குத்தான் வெற்றி என்று எல்லாரும் நினைத்து கொண்டிருந்தனர்.
ஆனால் நடுவர்கள் ஜீனா பார்க் வென்றதாக அறிவித்தனர். உடனே இந்தியரின் குத்துச்சண்டை தலைமை பயிற்சியாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சரிதா அழ ஆரம்பித்தார். அதிகாரிகள் மேல் முறையீடு செய்தனர். விளையாட்டு போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதால் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சி தொடங்கியது. பரிசளிப்பு மேடையில சரிதா தேம்பி தேம்பி அழுதவாறு நின்று கொண்டிருந்தார். சரிதாவிற்கு வெண்கலப்பதக்கம் அணிவிப்பதற்காக குழுவினர் வந்தனர். முதலாவது அதை கழுத்தில் அணிய மறுத்தார். பின்னர் அதை கைகளில் வாங்கி கொணடு நேரடியாக ஜீனா பார்க்கிடம் சென்று அவரை கட்டி பிடித்து விட்டு பதக்கத்தை அவரிடம் கொடுத்து விட்டார்.
அங்கு என்ன நடக்கிறதென்றே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாளல் புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் சரிதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சற்றும் எதிர்ப்பாராமல் நடைபெற்ற இந்த குழப்பத்தால் அதிர்ந்து போன தென் கொரிய வீராங்கனை தனக்குரிய வெள்ளிப் பதக்கத்தை வைத்து கொண்டு சரிதா கொடுத்த வெண்கலப் பதக்கத்தை நிகழ்ச்சி நடந்த இடத்தில் கீழே வைத்து விட்டு, அவரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் வெளியேறினார்.
போட்டிகளில் என்ன நடந்திருந்தாலும் பதக்கம் வழங்குமிடத்தில் சரிதா நடந்து கொண்ட விதம் வருந்தத்தக்கது என்றும், மற்ற போட்டியாளர்களும் சரிதாவின் தவறான முன்னுதாரணத்தை பின்பற்றி, இதுபோல தவறான முறையில் எதிர்ப்பை காட்டகூடும் என்று போட்டிகளின் கண்காணிப்பாளர் கூறினார்
இந்த நிகழ்ச்சி கெட்ட குமாரன் சரித்திரத்தில் வரும் மூத்த சகோதரனின் மனநிலையை படம் பிடித்து காட்டுகிறது. இளைய குமாரனுக்கு தகப்பன் விருந்து செய்ததை கண்ட மூத்த மகன் வீட்டுக்குள் வர விருப்பமில்லாமல், வேசிகளினிடத்தில் சொத்தை அழித்து போட்டு வந்திருக்கிற இவனுக்கு கொழுத்த கன்றை அடித்து விருந்து செய்கிறீரே என்று கேட்டு தன் இருதயத்தை வெளிப்படுத்தினது போல இச்சம்பவம் உள்ளது.
பிரியமானவர்களே, நாமும் கூட நாம் வேலை செய்யும் இடங்களில், சபைகளில், நம்மை அநியாயமாக நடத்தும்போது, கோபமடைந்து நம் வெறுப்பையும், நமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம். நாம் செய்தது சரிதான் என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால் அது சில வேளைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சில வேளைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்;லை. அதனால் சோர்ந்து போய் விடுகிறோம்.
இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது எந்த வகையில் நியாயம்? பாவமே செய்யாத அவரை பொய் குற்றம் சாட்டி சிலுவையில் அறைந்தார்கள் அல்லவா? ஆனால் அவர் அந்த சமயத்தில் அதை எதிர்த்து போராடவில்லை. தம் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லவில்லை என்பதை நாம் அறிவோம். தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக வாய்திறவாதிருக்கிற ஆட்டை போல அமைதியாக இருந்தார் என்று வேதம் கூறுகிறது. தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலுக்காகவும், அவர் நமக்காக சிலுவையில் மரித்து, அவருடைய இரத்தத்தால் நம் பாவங்கள் கழுவப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அவரை சிலுவையில் அறைந்ததற்கான உலகப்பிரகாரமான காரணங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளாகும்.
கிறிஸ்து அவர்கள் என்று சொல்லப்படும் கிறிஸ்தவர்களும் அவருடைய அடிச்சுவடியை பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும். நம் பக்கம் இருக்கும் நியாயத்;தை எடுத்து சொல்லலாம். ஆனால் அதற்காக தேவையற்ற காட்சிகளை நாம் ஏற்படுத்த கூடாது.
கிறிஸ்துவிலிருந்த பொறுமை நமக்கும் வரட்டும். பொறுமையினால் நாம் சத்துருவை வெல்லுவோம். சரியான நேரத்தில் சரியான நியாயம் கிடைக்க தேவன் நமக்கு கிருபை செய்வார். ஆமென் அல்லேலூயா!
இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் நிறைந்தவரே
நீடிய சாந்தம் பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே
என் இயேசு இராஜா ஸ்தோத்திரம் 
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே உயிருள்ள நாளெல்லாமே
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களில் அநேகருக்கு பொறுமை என்ற குணமே இல்லை தகப்பனே. பொறுமையற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற எங்களுக்கு பொறுமையான குணத்தை கற்றுதாரும். எங்களுக்கு விரோதமாக காரியங்களை செய்கிறவர்களை பொறுமையோடு சகிக்க எங்களுககு உதவி செய்யும். பழிக்கு பழி என்று போகாமல், பொறுமையோடு நீர் நீதி செய்வீர் என்று உம்மிடத்தில் வைத்து விட கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment