Saturday 1 October 2016

பிரித்தெடுத்த தேவன்

தேவன் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். – (2 தீமோத்தேயு 1:9).

நைஜீரியாவை சேர்ந்த ஒரு பெற்றோருக்கு இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டியபடி பிறந்தன. குழந்தைகள் தண்டுவடம் பக்கத்தில் ஒட்டியிருந்தன. அறுவை சிகிச்சை செய்து இருவரையும் பிரிப்பது மிகவும் கடினம் என்றும் அப்படி செய்தால் ஒரு குழந்தை இறக்கலாம் என்றும், அப்படி அந்த அறுவை சிகிச்சை செய்தாலும், ஏராளமான பணம் செலவிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அதனால் பெற்றோர் இந்த எண்ணததை கைவிட்டு, குழந்தைகளுக்கு ஹசானா, ஹூசைனா என பெயரிட்டு வீட்டிலேயே வளர்த்து வந்தனர்…
என்றாவது ஒரு நாள் இந்த இரு குழந்தைகளும் இறந்து விடும் என்று நினைத்து கொண்டிருக்கையில், ஒரு நல்ல மனிதர் அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் தான் ஏற்று கொள்வதாக அறிவித்து, இந்தியாவில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்வதால் டெல்லியிலுள்ள பி.எல். கப்பூர் என்னும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மருத்துவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை பெரும் சவாலாக அமைந்தது. அதை மூன்று கட்டங்களாக செய்ய தீர்மானித்தனர். அதன்படி அவர்கள்; தாங்கள் எப்படி அந்த சிகிச்சையை செய்ய போகிறோம் என்று முதலாவது ஒரு பொம்மைக்கு செய்து பார்த்தனர். ஆதன் பின்னர் டாக்டர் பிரசாந்த் ஜெயின் என்பவர் தலைமையில் மூன்று மாதங்கள் ஒவ்வொரு நாளாக குறிக்கப்பட்டு, இரு பிள்ளைகளையும் வெற்றிகரமாக பிரித்து எடுத்தனர்.
அப்பிள்ளைகளின் முதலாம் பிறந்த நாளை மருத்துவமனையிலேயே விசேஷவிதமாக கொண்டாடினர். இநத அறுவை சிகிச்சை நடைபெற மொத்தம் பதினெட்டு மணி நேரம் ஆனது. மொத்த செலவு 64 லட்சம் ரூபாய்கள். மொத்தம் நாற்பதுக்கும் மேலான நிபுணர்கள் சேர்ந்து இந்த சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். பிள்ளைகள் இருவரையும் பெற்றோர் சந்தோஷமாக தங்கள் தாய் நாட்டிற்கு கொண்டு சென்றனர்.
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் (சங்கீதம் 51:5) என்ற வசனத்தின்படி நாம் பிறக்கும்போதே பாவம் நம்மில் ஒட்டி கொண்டிருக்கிறது. எந்த சிறுபிள்ளைக்கும், யாருக்கும் தெரியாமல் அதற்கு பிடித்த உணவு பண்டத்தை எடுத்து சாப்பிடும்படி சொல்லி கொடுப்பதில்லை, ஆனால் அது எடுத்து சாப்பிடுகிறது. இப்படி எத்தனையோ காரியங்களை நாம் சிறுபிள்ளைகளிடத்தில் காண்கிறோம். நீதிமான் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை. எல்லாரும் பாவம் செய்து ஏகமாய் கெட்டு போனோம் என்று வசனம் சொல்லுகிறது.
ஆனால் நாம் பாவத்திலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் பாவத்தை கழுவி கொள்ள நாம் எங்கேயும் போய் குளிக்கவோ, கிரியைகளை செய்யவோ அவசியமே இல்லை. நம் கிரியைகளினால் அந்த பாவங்கள் நம்மை விட்டு அகல்வதும் இல்லை. ஒரு வேளை கிரியைகளை செய்து பாவங்கள் நம்மை விட்டு அகன்று போனது என்று நினைக்கிற நாம், நாம் மீண்டும் அதே பாவத்தில் ஈடுபட்டு நம்மை அழுக்காக்கி கொள்கிறோம்.
நம் பாவத்தை போக்க, கிறிஸ்து நமக்காக தம் சொந்த இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டெடுத்தார் என்பதே நற்செய்தி. யார் யாரெல்லாம் அந்த விலையேற பெற்ற இரத்தத்தால் கழுவப்பட வேண்டும் என்று வாஞ்சிக்கிறார்களோ அத்தனை பேருடைய பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்க இயேசுகிறிஸ்துவின் இரத்தம் வல்லமையுள்ளதாக இருக்கிறது.
அந்த நல்ல மனிதர் அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் தானே ஏற்று கொண்டது போல இயேசுகிறிஸ்துவும் நம் பாவங்களிலிருந்து நம்மை பிரித்தெடுக்க இரட்சிப்பை இலவசமாக கொடுத்திருக்கிறார். ஆனால் யார் அதை விசுவாசத்தோடு ஏற்று கொண்டு இயேசுவே என் பாவங்களை கழுவும் என்று சொல்கிறார்களோ அவர்களே இரட்சிப்பை பெற்று கொள்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் பாவமற்ற, விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவப்பட நம்மை ஒப்புக்கொடுப்போமா? இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். ஆமென் அல்லேலூயா!
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓரிடம் நீ பெற வேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத்தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார்
ஜெபம்: எங்கள் அன்பின் நேச தகப்பனே எங்கள் பாவங்களை போக்க நாங்கள் எந்த கிரியையும் செய்ய வேண்டாமல், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசித்து கழுவப்பட எங்கள் இருதயங்களில் கிரியை செய்யும். எங்கள் பாவங்களை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால்; கழுவப்பட ஜெபிக்கிறோம். எங்களுக்காக தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி எங்களுக்கு இரட்சிப்பை இலவசமாக பெற்று தந்த இயேசுகிறிஸ்துவின் அன்பை நினைத்து அவரை துதிக்கிறோம். எங்கள் ஜெப விண்ணப்பங்களை இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment