Saturday 1 October 2016

கீழே இழுக்கும் பாரம்

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். – (எபிரேயர் 12:1).

ஒரு கப்பல் நடுக்கடலில் மூழ்க ஆரம்பித்தது. அது தங்கக்கட்டிகளை ஏற்றி சென்ற கப்பல். அதில் பயணம் செய்த ஒவ்வொருவரும் உயிர் தப்புவதற்காக அமிழ்ந்துக் கொண்டிருந்த கப்பலிலிருந்து குதித்து, நீந்த ஆரம்பித்தனர். அதில் ஒருவனுக்கு அந்த கப்பலிலுள்ள தங்கத்தின் மேல் ஒரு கண். அவன் ஒரு நல்ல நீச்சல் வீரன். எல்லோரும் குதித்தபிறகு, அவன் தங்கக்கட்டிகளில் சிலதை எடுத்து, தன் இடுப்பில் கட்டிக் கொண்டான். இவற்றை கஷ்டப்பட்டு, கரையில் சேர்த்து விட்டால் இதை விற்று தான் வாழ்க்கை முழுவதும் எவ்வளவு செல்வந்தனாய் வாழலாம் என்று கற்பனை செய்தான்.
இடுப்பை சுற்றியுள்ள தங்கக்கட்டிகளோடு கடலில் குதித்து நீந்த முயன்றான். முடியவில்லை. தங்கக்கட்டிகளின் கனம் அவனை கீழே இழுத்தது. அவனை தண்ணீரின் ஆழத்திற்குள் இழுத்தது. ஒரு நொடியில் அவன் சுதாரித்தவனாய் இடுப்பிலுள்ள ஒவ்வொரு கட்டியாக தூக்கி எறிய ஆரம்பித்தான். இறுதியில் தன் உயிருக்கே ஆபத்தை கொண்டு வரும் தங்கக்கட்டிகள் ஒன்றுக் கூட தன்னிடமில்லாதவாறு அனைத்தையும் எறிந்தான். பாரம் நீங்கி இலகுவானவனாக கடலில் நீந்தி கரை சேர்ந்தான்.
ஆம், பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டால் தான் நாம் ஓட்டத்தில் வெற்றியாய் ஓடி முடிக்க முடியும். பாரத்திலெல்லாம் பெரிய பாரம் பாவ பாரமாகும். இந்த பாவபாரத்தோடு சேர்ந்து கிறிஸ்தவ வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் ஓடவே முடியாது. இந்த பாவபாரம் நம்மை இழுத்து இருளில் தள்ளிவிடும். அப்படியென்றால் நாம் செய்ய வேண்டிதென்ன? எந்த பாவம் நம் கிறிஸ்தவ வாழ்வின் ஓட்டத்திற்கு தடையாயிருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். பொருளாசை என்னும் பாவமா, கண்களின் இச்சை என்னும் பாவமா, ஜீவனத்தின் பெருமையா? வெளிப்படையாக தெரியாத எந்த பாவபாரம் உங்களை இழுக்கிறது என்று சிந்திக்க வேண்டும். அதை நம்மை விட்டு நீக்கி விட தேவ தயவையும், வேத வசன சுத்திகரிப்பையும் நாட வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் கிருபையை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலை உண்டு என்று வசனம் கூறுகிறதல்லவா! அவர் தரும் விடுதலை இவ்வுலக வாழ்வில் மட்டுமல்ல, மறுமை வரை நம் ஆத்துமாவை காப்பாற்றும்.
இன்னும் சிலருக்கு குடும்பத்தைப் பற்றிய பாரம், பிள்ளைகளைப் பற்றிய பாரம், வேலைகளை குறித்த பாரம் என பலவகையான பாரங்களை சுமந்து சுமந்து களைத்து போகிறார்கள். அதனிமித்தம் அனுதினமும் தேவனோடு ஐக்கியம் கொள்ளும் நேரத்திலும் குறைந்து போய் விடுகிறார்கள். நம்மில் அநேகர் நினைக்கிறோம், நான் இல்லாவிட்டால், நம் குடும்பத்தை யாருமே கவனிக்க முடியாது என்று. என்னோடு வேலை செய்யும் ஒரு சகோதரி, தன் வேலையில் தன் பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்க, தான் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் அதிக பணம் கிடைக்கும் மாற்றல் கேட்டு வாங்கி சென்றார்கள். தன்னுடைய சம்பாத்தியம் மிக முக்கியம், அது இல்லாமல் பிள்ளைகளை படிக்க வைக்கவே முடியாது என்று நினைத்தார்கள். ஆனால் அங்கு போன சில மாதங்களில், பாத்ரூமிற்கு போனவர்கள் திரும்ப வரவே இல்லை. கதவை உடைத்து பார்த்தபோது, அவர்கள் மரித்துக் கிடந்தார்கள். அந்த சகோதரிக்கு எந்த வியாதியும் இருந்ததில்லை. நம்மில் யாரும் சொல்ல முடியாது, நான் இத்தனை சம்பாதிப்பேன், என் பிள்ளைகளை இப்படி படிக்க வைப்பேன் என்று.
பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்காக திட்டங்கள் தீட்டுவது நல்லது. ஆனால் நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்று நாம் நினைக்கவே முடியாது. நாளை என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. கர்த்தர் நமக்கு கொடுக்கும் நாட்கள் வரை அவருக்காக வாழ்வோம். நம்மை சுற்றி நிற்கிற பாரமான காரியங்களையும், பாவத்தையும் தள்ளி விட்டு, நம் பாரங்கள் அனைத்தையும் கர்த்தர் மேல் வைத்து விட்டு, இலகுவாய் தேவன் நமக்கு நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடு ஓடி ஜீவ கிரீடத்தை பெற்றுக் கொள்வோமா? ஆமென் அல்லேலூயா!
சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்
ஜெபம் : எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களை சுற்றி நிற்கும் பாவங்களை நாங்கள் உதறிவிட்டு, நாங்கள் கஷ்டப்பட்டு சுமந்து கொண்டிருக்கிற பாரமான காரியங்களை உம்முடைய பாதத்தில் வைத்துவிட்டு, நீர் நியமித்திருக்க ஓட்டத்தில் அவசரமாக அல்ல, பொறுமையோடு ஓடி முடிக்க கிருபை செய்யும். ஜீவ கிரீடத்தை பெறுகிறவர்களாக நாங்கள் ஓட உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment