Saturday 1 October 2016

ஜீவன் தப்ப ஓடிப்போ

அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போஇ பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். – (ஆதியாகமம் 19:17).

பிரச்சனைகளின் நிமித்தமாக வேறு நாடுகளில் இருந்து சொந்த நாட்டிற்கு தன்னுடைய ஜனங்களை அதிகமாய் கொண்டு வந்த நாடு எது தெரியுமா? நமது நாடான இந்தியாவேதான். அதினால் அது சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் வெளிவந்துள்ளது. 1,70,000 பேரை 488 விமானங்கள் மூலம் இந்தியா கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
1990ஆம் ஆண்டு ஈராக் தேசம் குவைத் நாட்டை கைப்பற்றியபோது, எதிர்பாராதவிதமாக நடந்த இந்த ஊடுருவலின் நிமித்தம் எல்லா நாட்டினரும் திகைத்தனர். என்ன செய்வது என்று தவித்தனர். உணவு பஞ்சம், குழந்தைகள் வைத்திருப்போர் பால் வாங்க முடியாமல் தவித்தனர்.
இச்சண்டையில் பல நாடுகள் தலையிட்டன. அவரவர் தங்கள் தேசத்து மக்களை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் இந்தியர்கள் மற்ற நாட்டினரை விட அதிகம் இருந்தனர். ஆகையால் குவைத்தில் இருந்த இந்தியர்களை பத்திரமாக தாயகம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு வந்தது. அதற்காக பல யுக்திகளை கையாள வேண்டி வந்தது.
குவைத் நாடும் வேண்டும், ஈராக்கையும் பகைத்து கொள்ள கூடாது என்று தீர்மானித்த இந்தியா அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து எந்த செய்தியையும் வெளியிடவில்லை. அப்படி செய்திருந்தால் ஈராக் இராணுவம் இந்தியர்களை வெளியே விட அனுமதித்திருக்காது.
ஆனால் சமயோசிதமாக முடிவெடுத்து, ஈராக் அதிபர் சதாம் ஹீசைனிடம் பேசி, சம்மதம் வாங்கி, தன் மக்களை தாயகம் கொண்டு வந்தது. கைப்பற்றிய 14 நாட்களுக்குள் இந்த சம்மதத்தை இந்திய அரசாங்கம் பெற்று கொண்டது. அப்படி வந்தவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. கர்த்தர் அதிசயவிதமாய் இரண்டு மாத குழந்தையாக இருந்த எங்கள் மகனையும், எங்களையும் பத்திரமாக தாயகம் கொண்டு வந்து சேர்த்தார். அல்லேலூயா!
சம்மதம் வாங்கின இந்திய அரசாங்கத்திடமிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் உண்டு. அவசரப்பட்டு, பதறி வார்த்தைகளை உதிர்த்த விட்டால் சில நேரங்களில் நினைத்த நல்ல காரியங்கள் நடைபெறாமலேயே போய் விட நேர்ந்து விடும். எனவே ஞானமாய் பேசி பிரச்சனைகளை சமாளிக்க பழகி கொள்ள வேண்டும். அதை ஞானமாய் நடத்தின இந்திய அரசாங்கத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும். அந்த சமயத்தில் திரு. குஜரால் அவர்கள் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அவர் குவைத்திற்கு வந்து காரியங்களை செவ்வைப்படுத்தினார்.
பதினான்கு நாட்களில் சம்மதம் பெற்று, தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற தொடங்கியது இந்தியா. முதலில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், சிறு குழந்தை வைத்திருப்போர் என்று குழுக்களாக பிரித்து அனுப்ப தொடங்கினார்கள்.
தங்கள் குடும்பத்தை யோசித்து அநேகர், தங்கள் பொருட்கள், சம்பாதித்து வைத்தவை, வங்கியில் போட்டு வைத்தவை என்று எதையும் பொருட்படுத்தாமல், உயிர் தப்பினால் போதும் என்று, கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு, நாட்டை விட்டு வெளியேற தொடங்கினார்கள். நாங்கள் கையில் குழந்தையுடன், இரண்டு சிறிய பெட்டிகளில் எங்கள் துணிகள் சிலவற்றை எடுத்து கொண்டு புறபட்டோம். ஒரு வருடம் கழிந்து வந்து பார்த்தபோது எங்கள் வீடு இருந்தது. ஆனால் எந்த பொருட்களும் இல்லை.
ஆனால் சிலர், பல ஆண்டுகளாக தாங்கள் சம்பாதித்த பொருட்களையும், பணத்தையும் விட்டு விட்ட மனமில்லாமல், மரித்தாலும் அங்கேயே மரிப்போம் என்று சொல்லி அங்கேயே இருந்து விட்டனர். குண்டு மழை பொழிந்து, பாதி குவைத்தை அழித்து விட்டாலும், அவர்கள் அங்கேயே இருந்து விட்டனர்.
சிலருக்கு அங்கிருந்த எண்ணெய் கிணறுகள் எரிந்தபடியால் அதிலிருந்து புறப்பட்ட கருமையான வாயுக்களை உட்சுவாசித்து, புற்று நோய் வந்தது. அநேக சுவாச சம்பந்தப்பட்ட, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குள்ளாயினர்.
இச்சம்பவங்கள் நமக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? லோத்தின் மனைவி தான் இருந்த நாட்டை விட்டு போக முடியாமல் பின்னிட்டு பார்த்து உப்புதூணாகி போனாள் அல்லவா?
அதை போன்று இந்த நாட்களிலும் நாம் நம் சம்பாத்தியம், உலக பொருட்கள் தான் முக்கியம் என்று அதையே பிடித்து கொண்டு, கர்த்தரை தேடாமல் போனால் அவருடைய வருகையில் கைவிடப்படுவோம் என்பது நிச்சயம். நாம் வாழ்வதற்கு பணம் முக்கியம். அது இல்லாமல் வாழ முடியாது. ஆனால் அதையே குறிக்கோளாக நம் வாழ்க்கை இருந்தால் நமது மறுமையின் வாழ்வு அர்த்தமற்றதாக, பிரயோஜனமற்றதாக போய் விடும்.
கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரை தேடுவோம். அவரை பற்றி கொள்வோம். இம்மைக்காகவே நாம் வாழாமல், மறுமையை நினைத்து அங்குதான் யுகாயுகமாக வாழ்வோம் என்பதை நினைத்து, நம்முடைய வாழ்க்கையை கர்த்தருக்கு பிரியமாக வாழ பழகி கொள்வோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!
கட்டின வீடும் நிலம் பொருளும் 
கண்டிடும் உற்றார் உறவினரும் 
கூடுவிட்டு உன் ஆவி போனால் 
கூட உன்னோடு வருவதில்லை
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசு உன்னை
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த உலகமும் அதன் ஆசை இச்சைகளும் ஒரு நாளில் அழிந்து போகுமென்று நாங்கள் உணர்ந்து, தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும். கர்த்தரை அறிந்து கொண்ட நாங்கள் அதோடு நின்று விடாதபடி, கர்த்தருக்குள் வளர, கனி கொடுக்க கிருபை செய்யும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் எங்கள் நல்ல தகப்பனே ஆமென்

No comments:

Post a Comment