Saturday 1 October 2016

இழந்து போனதை தேடுவோம்..

இயேசு இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். – (லூக்கா 19:10).

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசிய விமானம் காணாமற் போய் அது கிடைக்காமற் போனது அனைவரும் அறிந்ததே. அதை தேடும் பணி ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்றது. எத்தனையோ கோடி ரூபாய்கள் செலவானது. பன்னாட்டு படைகள் தேடும் முயற்சியில் இறங்கின.
அப்படி அவர்கள் தேடும் போது அநேக பொருட்கள் கிடைத்தன. ஆனால் காணாமற்போன பயணிகளின் உறவினர்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கவில்லை. ஆனால் அப்படி தேடினபோது உலகத்தின் பலகோடி பேருக்கு அது பிரயோஜனமாயிருந்தது.
எப்படி என்றால், தேடும்போது கடலின் அடியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத உயரமான மலைகளும், குழிகளும் இருப்பதை கண்டுபிடித்தனர். அதை குறித்த வரைப்படங்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். கடலினடியில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்க போகிறது.
இதுதவிர கடலுக்கடியில் பூமியதிர்ச்சி ஏற்படும்போது, சுனாமிகள் உண்டாகும் இடஙகள் எதுவென்று கண்டுபிடிக்க இந்த தேடல் உதவியது. எங்கெங்கே கடலில் சுழற்சி இருக்கிறது, எந்த பகுதிகளில் கடல் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை எல்லாம் துல்லியமாக கண்டுபிடித்தனர். இதனால் கடலில் பயணிப்போர், மீன்பிடிப்போருக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
இதற்கு பின்பு கடலில் விழுந்து காணாமற்போன ஏர் ஏசியா விமானத்தை எளிதில் கண்டுபிடிக்க இந்த தேடுதல் மிக அதிக அளவில் உதவினது.
மலேசிய விமானம் மறைந்தது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும், அதினால் அநேக கண்டுபிடிப்புகளை நடத்த அது உதவியது எத்தனை ஆச்சரியம்! மட்டுமல்ல, பன்னாட்டு படையினரிடையே ஒரு ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும் அது ஏற்படுத்தியது என்று ஒரு அதிகாரி கூறினார்.
கடலுக்கடியில் உள்ள உலகத்தின் எட்டு சதவிகிதத்தைதான் மனிதன் இதுவரை கண்டுபிடித்திருக்கிறான். இன்னும் கண்டுபிடிக்காத இடங்கள் 92 சதகிவிதமாகும்.
காணாமற் போன ஆத்துமாக்களை தேடி நம்முடைய தேடுதலும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அநேக ஊழியர்கள் இன்னும் கர்த்தருடைய வார்த்தையை விதைத்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் அப்படி காணாமற் போன ஆத்துமாக்களை தேடி செல்லும்போது, மற்றவர்கள் அந்த வசனத்தை கேட்டு இரட்சிக்கப்படலாம். ஆகையால் தொடர்ந்து நாம் தேடுவோம். கர்த்தரின் வார்த்தைகளை விதைப்போம். ஆவியானவர் கிரியை செய்வார்.
இந்த கடைசி நாட்களில் எல்லா மீடியாக்கள் மூலமாகவும் கர்த்தருடைய வார்த்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எப்படியாவது தாங்கள் அனுப்பும் ஒரு வசனத்தின் மூலம் யாராவது தொடப்பட வேண்டுமே என்று ஒவ்வொருவரும் வார்த்தைகளை அனுப்பி கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் தேடுதலும் ஏதாவது ஒரு வகையில் யாரையாவது தொடும். காணாமற் போன ஒரு ஆட்டை தேடின மேய்ப்பனை போல கர்த்தராகிய இயேசுவும் நம் ஒவ்வொருவர் மூலமாகவும் ஒவ்வொரு ஆத்துமாவையும் தேடுகிறார். அவர் கண்டுபிடிக்கதக்கதாக நாம் அனைவரும் அவருக்கு உதவி செய்வோம். ஆத்துமாக்கள் பரலோகத்தை நிரப்ப கர்த்தர் கிருபை செய்வார். ஆமென் அல்லேலூயா!
காணாத ஆட்டின் பின்னே 
கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கிறாரே
இன்றே திரும்பி நீ வா
முள்ளும் புதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகிறார்
சிற்றின்ப சேற்றினில் நீ சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்
ஜெபம்:  எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் இழந்து போனதை தேடவும், இரட்சிக்கவும் வந்த கிறிஸ்துவின் தேடுதல் இருக்கிறபடியால் நாங்களும் வாஞ்சையோடு அப்படிப்பட்ட ஆத்துமாக்களை தேடி கர்த்தரிடத்தில் கொண்டு சேர்க்க கிருபை செய்யும். ஒரு ஆத்துமாவை தேடி அது கிடைக்காததால் நாங்கள் சோர்ந்து போய் விடாதபடி, தொடர்ந்து தேடும்படியாக எங்களை பெலப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

1 comment: