Saturday 1 October 2016

பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிடுவோம்

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். – (நீதிமொழிகள் 28:13).

ஆப்பிரிக்க கண்டத்தில் எபோலா என்னும் வியாதி சமீபத்தில் அநேகரை தாக்கியது அனைவரையும் அறிந்ததே. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிற்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டனர். அநேக வகுப்புகள் அதை எப்படி தடுப்பது என்பதை குறித்து எடுக்கப்பட்டது.
அதில் லைபீரியா என்னும் நாட்டில் அதிகமாக இந்த நோய் தாக்கியது. அப்போது அந்த வியாதி தாக்கின ஒரு பெண்ணை, டன்கன் தாமஸ் எரிக் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்தார். மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தவுடன் மிகவும் பெலவீனமாயிருந்த அப்பெண்ணை கரங்களில் தூக்கி கொண்டு வீட்டில் கொண்டு போய் விட்டார். அதற்கு பின் சில நாட்களில் அந்த பெண் இறந்து விட்டாள்.
டன்கன் நான்கு நாட்கள் கழித்து அமெரிக்காவில் உள்ள தன் குடும்பத்தோடு இணைந்து கொண்டார். பயங்கரமாக அந்த சமயத்தில் பரிசோதனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் விமான அதிகாரிகள் அவரிடம் எபோலா நோயுள்ள நோயாளியோடு தொடர்பு கொண்டிருந்தீர்களா? என்று கேட்டதற்கு இல்லவே இல்லை என்று பொய் சொல்லி விட்டார்.
2014ஆம் தேதி செப்டம்பர் மாதம் 24ம் தேதி எபோலா நோய்க்கான அறிகுறிகள் தென்பட மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு வயிற்றுவலி, காய்ச்சல் போன்றவை இருந்தன. அங்கும் சமீபத்தில் எந்த நாட்டிலிருந்து வந்தீர்கள்? எபோலா நோயாளியிடம் தொடர்பு கொண்டீர்களா? என்று கேட்டதற்கு நான் லைபீரியா நாட்டிலிருந்து வந்தது உண்மைதான், ஆனால் எபோலா நோயாளிகளுடன் எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்று மறுபடியும் பொய் சொன்னார். எனவே அந்த மருத்துவமனையிலிருந்து மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பி விட்டனர்.
பின்பு நான்கு நாட்கள் கழித்து, மிகவும் வியாதிப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எபோலா நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தகுந்த சிகிச்சை பெற்றும், நேரம் கடந்த சிகிச்சையால் பலனின்றி அக்டோபர் மாதம் 8ம்தேதி காலமானார். இவர்தான் அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கி மரித்த முதல் நபர் ஆவார். அவருடன் நெருங்கி இருந்த 50 பேருக்கு தகுந்த சிகிச்சை கொடுக்கப்பட்டு நோய் பரவாதபடி தடுக்கப்பட்டது.
எபோலா எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது பாருங்கள். முதலிலேயே அவர் உண்மையை சொல்லியிருந்தால் அந்த நோய்க்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர் காப்பாற்றப்பட்டிருக்க கூடும்.
பிரியமானவர்களே தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று வேதம் கூறுகிறதல்லவா? நாம் நம்முடைய பாவங்களை மறைக்காமல் கர்த்தரிடம் அறிக்கை செய்து விட்டுவிடும்போது அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை சுத்திகரிக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார். நாம் அவைகளை மறைத்து வைப்போமானால் நம் பாவங்கள் மன்னிக்கப்படாமல் நாம் நம்முடைய பாவங்களிலேயே மரித்துபோவோமானால் எத்தனை பரிதாபம்! நித்திய ஜீவனை இழந்து போவோமே!
“ நான் என் அக்கிரமத்தை மறைக்காமல்இ என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (சங்கீதம் 32: 5) என்று சங்கீதக்காரன் சொல்வதை பார்க்கிறோம். நாம் அறிக்கை செய்யும்போது தேவன் நம் பாவத்தின் தோஷத்தை மன்னிக்கிறார். அல்லேலூயா!
ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும்போது தேவனிடம் அந்த நாளில் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தோடு படுக்கைக்கு செல்வோம். கர்த்தரின் வருகை அந்த இரவில் இருக்குமென்றாலும் நாம் அவரோடு எடுத்துக் கொள்ளப்படுவோம். ஆமென் அல்லேலூயா!
பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை
உம் சிலுவை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசுநாதா.
கெட்ட குமாரனை போல் கதிகெட்டு அலைந்தேனையா
கள்ளனுக்கு அருள்செய்த நீர் தள்ளாதீர் சிலுவை நாதா
ஜெபம்:  எங்கள் அன்பின் பரலோக தகப்பனே எங்கள் பாவங்களை நாங்கள் அறிக்கை செய்து அவற்றை விட்டுவிட கிருபை தாரும். நாங்கள் அறிக்கை செய்யும்போது அவற்றை மன்னித்து எங்களை நீர் சுத்திகரிப்பதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி எங்களை சுத்திகரிக்க வல்லமையுள்ளதாக இருக்கிறபடியால் எங்கள் பாவங்களிலே நாங்கள் வாழாதபடி அவற்றை உம்மிடம் அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்ள உதவி செய்யும். எல்லாவற்றையும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் கேட்டு கொள்கிறோம் எங்கள் நல்ல தகப்பனே ஆமென்.

1 comment:

  1. Slots Casino Site - luckyclub.live
    Lucky Club Casino offers hundreds of exciting Slots casino luckyclub games that can be enjoyed for free, with great bonuses and the chance to win huge jackpots!

    ReplyDelete