Saturday 1 October 2016

வேண்டிக்கொள்ளுங்கள்

உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும், துர்க்குணராகிய பொல்லாத மனுஷர்கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் . -(2தெசலோனிக்கேயர்8:1-2)

ஜேம்ஸ்,ஷா, ஈனோக்கு ஆகிய மிஷமெனரிகள் நூறு ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டிற்கு வந்து சுவிசேஷத்தை சொல்லி, அவர்கள் செய்த தியாகங்கள் பெரியது. இரண்டு பகல், இரண்டு இரவு இரயில் பயணம் செய்து திருநெல்வேலியை அடைந்து. அந்த நாளில் ஓய்வு எடுத்துவிட்டு, மாட்டு வண்டியில் ஒரு நாள் சவாரி செய்து பிரகாசபுரம் வந்தடைந்துள்ளனர். பிரகாச புரத்தில் அச்சமயம் மின்சாரம். போக்குவரத்துவசதி, சரியான சாலை கிடையாது. கோடைகாலத்தில் வெயில் சுட்டெரிக்கும்.
உறவுகளையும், நண்பர்களையும் பிரிந்து ஆயிரக்கணக்கான மைகளுக்கப்பால் உள்ள இந்த கிராமத்தில் ஊழியம் செய்ய வந்த அவர்களின் தியாகம் தான் எத்தனை பெரியது!
இதுப்போலவே இன்னும் பல மிஷனெரிகள் இது போன்ற கிராமங்களில் வந்து தங்கியிருந்து சுவிஷேசத்தை பிரசங்கித்துள்ளனர். அவை யாவும் பாராட்டத்தக்கது. சரியான மருத்துவ வசதியில்லாமல் தங்களது பிள்ளைகளை இழக்க கொடுத்தவர்கள் உண்டு. ஈ.டி.வில்மால்ட் என்ற மிஷனெரி நாகர்கோவிலில் இறந்த ஏழுவயது மகனை பிரகாசபுரத்தில் கொண்டு வந்து அடக்கம் செய்துள்ளார். அந்த கல்லறை இன்றும் உண்டு.
பவுல் அப்போஸ்தலனின் மிஷனெரி பயண அனுபவத்தில் பட்ட பாடுகளை விவரிக்க முடியாது. அதை குறித்த அவர் சொல்கையில், ‘நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன், மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிராயணம்பண்ணினேன், ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன் (2 கொரிந்தியர் 11:23-27) என்று எழுதியிருக்கிறார். எத்தனை பாடுகள்? எத்தனை பிரயாசங்கள்?
இத்தனை பாடுகள் பட்டு, அவர் சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? எப்படியாவது ஜனம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே அல்லாமல், அவருக்கு வேறு எந்த லாபமும் அதனால் இல்லை என்பதே உண்மை. மேலை நாடுகளிலிருந்து நமது தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் அநேக சிரமங்களை மேற்கொண்டு வந்து ஊழியம் செய்த அந்த ஊழியர்களுக்கும் ஏதாவது லாபம் இருந்ததா? இல்லை, எப்படியாவது நமது ஜனம், இந்தியர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே அல்லாமல் வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் இங்கு வந்து பாடுகள் படவில்லை.
அப்படி அவர்கள் கஷ்டப்பட்டு செய்த ஊழியங்களின் விளைவாக கர்த்தரை ஏற்றுக்கொண்ட நம் முன்னோர்களால் நாம் இன்று கிறிஸ்தவர்களாக, கர்த்தரை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கிறோம். அது எவ்வளவு பெரிய பாக்கியம்!
அப்படி தியாகமாய் செய்த ஊழியத்தினிமித்தம் கர்த்தரை ஏற்றுக் கொண்ட நாம் இப்போது நம் நாட்டை கர்த்தருக்குள் கொண்டு வர எத்தனை பிரயாசப்படுகிறோம்? நமது ஊழியங்கள் எத்தனை தியாகம் நிறைந்ததாக இருக்கிறது? நமது நகரத்தில் உள்ள ஊழியர்கள் செய்யும் ஊழியங்களை குறித்து சொன்னால் அது குற்றம் சொல்வதாக இருக்கும். மேலை நாட்டினர் தியாகமாய் செய்த ஊழியங்கள் எங்கே? நாம் எத்தனை சொகுசாக ஊழியம் செய்து கொண்டு இருக்கிறோம்!
அப்போஸ்தலனாகிய பவுலின் தியாகங்கள், மேலை நாட்டினர் செய்த தியாகங்கள் நம் கண்முன் வரட்டும். நாமும் நம்மால் இயன்றதை கர்த்தருடைய இராஜ்யம் பரவுவதற்காக செய்வோமா? உண்மையாய், தியாகமாய் ஊழியம் செய்கிறவர்களுக்காக ஜெபிப்போமா? அவர்கள் பொல்லாத மனுஷர் கையினின்று தப்புவிக்கப்பட வேண்டும், அவர்கள் மூலம் தேவனுடைய வசனம் எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்று அவர்களை ஜெபத்தில் தாங்குகிறவர்களாக மாறுவோம். கர்த்தர் பொறுப்பெடுத்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!
திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என் ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வந்து, கிராமங்களில், எந்தவித வசதியும் இல்லாமல் மேலை நாட்டினர் வந்து தியாமாய் செய்த ஊழியங்களுக்காக உம்மை துதிக்கிறோம் தகப்பனே. எங்கள் ஊழியங்களும் அப்படி சுயநலமில்லாமல் தியாகமாய் இருக்க கற்றுதாரும். உண்மையாய் உமக்கென்று ஊழியம் செய்கிற ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் தகப்பனே. அவர்களை ஆசீர்வதியும். தேவைகளை சந்தியும். பொல்லாத மனுஷர் கையினின்று அவர்களை தப்புவியும். உம்முடைய வசனம் பரம்பி செல்ல கிருபை செய்யும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment