Saturday 1 October 2016

அன்பு பாராட்டுவோம்

அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி,எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். – (அப்போஸ்தலர் 28:2).

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி உலகத்தையே உலுக்கிய சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. அப்போது டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பிராங்பர்ட் என்ற நகரத்திலிருந்து புறப்பட்டு, அமெரிக்கா நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்நேரத்தில் டெல்டா நிறுவனததின் தலைமை செலயகத்திலிருந்து விமானிக்கு ஒரு செய்தி வந்தது, அமெரிக்காவிலுள்ள அத்தனை விமான நிலையங்களும் மூடப்பட்டன. எனவே அருகாமையிலுள்ள விமான நிலையம் கனடா தேசத்தில் தரையிறங்குமாறு கூறப்பட்டது.
உடனே விமானி கனடா நாட்டின் கட்டுபாடு நிலையத்துடன் தொடர்பு கொண்டு, அங்கே தரையிறக்க அனுமதி கேட்டபோது, எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக அனுமதி கிடைத்தது.
அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் புதிராக இருந்தது. ஏற்கனவே 20 விமானங்கள் அங்கு தரையிறங்கி இருந்தது. யாரையும் தரையில் இறங்க அனுமதிக்கவும் இல்லை.
கடைசியில்தான் தெரிய வந்தது, அமெரிக்காவில் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி கட்டிடங்களில் மோதி, அநேகர் மரித்துவிட்டார்கள் என்று.
அடுத்த நாள் காலை பதினொரு மணி அளவில் பயணிகளை இறக்கி, அந்த நகரத்திலுள்ள வீடுகளிலும், பள்ளிகளிலும் மண்டபங்களிலும் தங்க வைத்தனர். அந்த நகரத்தின் உணவகங்கள், பேக்கரிகள் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயணிகளுக்கு உணவளித்தனர். அமெரிக்காவில் விமான நிலையம் திறக்கு;வரை அவர்கள் இங்குதான் இருக்க வேண்டும்.
பயணிகளுடைய பெட்டிகள் அனைத்தும் விமானத்தில் இருந்தபடியால் தேவைப்பட்டவர்களுக்கு மாற்று வஸ்திரங்களை ஊர் மக்கள் கொடுத்தனர். திடீரென்று வந்து சேர்ந்த இந்த விருந்தாளிகளை அன்புடன் கவனித்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தன்னார்வமாக தேவையான உதவிகளை செய்தனர். சில பயணிகளை நேரம் போவதற்காக உல்லாச பயணம் கொண்டு சென்றனர். முன்பின் தெரியான அந்நியர்களாக இருந்தாலும், அனைவரையும் ஒரு குறையில்லாமல் அன்புடன் கவனித்து கொண்டனர். இரண்டு நாள் கழித்து நிலைமை சரியானவுடன், அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் தாயகம் திரும்பினர்.
மெலித்தா என்னும் தீவில் இருநூற்றெழுபத்தாறு பேர் பவுலுடன் சேர்ந்து, தங்கள் கப்பல் சேதமானதினால் போய் சேர்ந்தார்கள். அந்நியராகிய அந்த தீவார் அவர்களுக்கு பாராட்டடின அன்பு பாராட்டத்தக்கது. அவர்களை விசாரித்து, களைத்து போய் வந்திருந்த அவர்களுடைய தேவைகளை சந்தித்தார்கள்.
நாமும் சில வேளைகளில் முன்பின் தெரியாத இடத்திற்கு செல்லும்போது, ஒருவேளை ஆஸ்பத்திரியாக இருக்கலாம், வேறு இடமாக இருக்கலாம், யாராவது நம்மை விசாரித்து, உதவி செய்தால் அதை நம்மால் மறக்க முடியாது. ஒருமுறை நான் அப்படி ஒருவருக்கு உதவினதால், முன்பின் தெரியாத அவர்கள் எனக்கு நல்ல நண்பனாக மாறினார்கள். அந்த நட்பு இன்று வரை ஆழமாக இருக்கிறது.
முன்பின் தெரியாத ஒரு நபருக்கு, அவருடைய தகுதி, படிப்பு எதையும் கருதாமல் நாம் உதவி செய்ய முன்வர வேண்டும். சிலர் நன்கு படித்தவர்கள், பகட்டானவர்களுக்கு உதவி செய்வார்கள். அப்படியல்ல, தராதரம் பார்க்காமல் நாம் உதவும்போது, நாம் சிலவேளைகளில் தூதர்களையே உபசரித்திருப்போம்.
அப்படி நாம் செய்யும்போது, நம்முடைய தேவைகளில் நமக்கு உதவ யாரையாவது கர்த்தர் அனுப்புவார். நம் இருதயம் களிகூரும். கைமாறு கருதாமல் உதவும்படிதான் வேதமும் நமக்கு போதிக்கிறது. ஆகவே மற்றவர்களுக்கு உதவுவோம். கர்த்தரின் ஆசீர்வாதமும், மற்றவர்களின் ஆசீர்வாதமும் நம் மேலும், நம் சந்ததிகளின் மேலும் என்றென்றும் இருக்கும் ஆமென் அல்லேலூயா!
பசியுற்றோர்க்கு பிணியாளிகட்கு 
பட்சமாக உதவி செய்வோம்
நாம் முயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம்
நாம் ஜெயித்திடுவோம்
தாசரே இத்தரணியை அன்பாய் 
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
ஜெபம்: எங்கள் அன்பின் நேச தகப்பனே, மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் முந்தி கொள்ளத்தக்கதான இருதயத்தை தாரும் ஐயா. நன்மை செய்வதில் சோர்ந்து போகாதபடிக்கும், தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்து உம்மை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment