Skip to main content

உபத்திரவப்பட்டது நல்லது …

உபத்திரவம் பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும, உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். – (ரோமர் 5:3-4).
ஒருவர் சிறிய பரிசோதனை ஒன்றை செய்தார். மூன்று பாத்திரங்களை எடுத்து, மூன்றிலும், ஒரேயளவு தண்ணீர் ஊற்றி, ஒன்றில் உருளைக்கிழங்கையும், அடுத்ததில் முட்டையையும், மற்றொன்றில் சிறிதளவு டீ தூளையும் சர்க்கரையையும் போட்டு மூன்றையும் மூடி நெருப்பில் வைத்தார். குறிப்பிட்ட நேரம் கழித்து மூன்றையும் திறந்தார். இறுகி போயிருந்த உருளைக்கிழங்கு மிருதுவாகியிருந்தது. திரவ நிலையிலிருந்த முட்டை திட நிலைக்கு மாறியிருந்தது. டீத்தூளும் சர்க்கரையும் தண்ணீரோடு கலந்து சுவை மிக்க தேநீராக மாறியிருந்தது..
ஒரே நெருப்பு மூன்று பாத்திரங்களில் மூன்று வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறதல்லவா? நம்முடைய வாழ்விலும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அக்கினி போன்ற பாடுகளின் வழியே கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைகளை தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கிறார்.
அந்த பாடுகளின் முடிவிலே ஒரு சிலர் வேக வைத்த உருளைக்கிழங்கை போல கடின நிலையிலிருந்து மாறி, நொறுங்குண்ட இதயத்தை பெற்றுகொண்டு தேவ வார்த்தைகளை அப்படியே ஏற்று கொண்டு, இன்னும் ஆண்டவரை நேசிக்கிறவர்களாய் மாறி, பாடுகளின் மூலம் தேவனது பிரமாணங்களை கற்று கொள்கிறார்கள். ஒரு சகோதரன் சொன்னார், ‘நான் பட்ட பாடுகளினால், என்னை கர்த்தருக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்து, என்னில் காணப்படும் வைராக்கியங்கள், கசப்புகள் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். என்னில் அவருடைய அச்சடையாளங்கள் காணப்படும்படி என்னையே அவருக்கு ஒப்புக்கொடுத்து விட்டேன்’ என்றார்..
இன்னும் சிலர் முட்டையை போல முன்னிருந்ததை விட தங்கள் இருதயத்தை கடினப்படுத்துகிறார்கள். ‘தேவன் இவ்வளவு பெரிய பாடுகளை அனுமதிக்குமளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்? தினமும் ஜெபித்து வேதம் வாசிக்கும் எனக்கு என் உபத்திரவம்?’ என்று கூறி தங்கள் செயலோடு ஒப்பிட்டு தேவனை முறுமுறுப்பார்கள். அவர்களின் இருதயம் சுயநீதியினால் நிறைந்து காணப்படும். எனக்கு தெரிந்த ஒரு சகோதரி, தான் பட்ட உபத்திரவங்களினிமித்தம், கடவுளே இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள். என்ன தான் சொன்னாலும், ‘ஏன் கர்த்தர் எனக்கு இந்த பாடுகளை அனுமதித்தார்?’ என்று கர்த்தரை குறை சொல்லி கொண்டு இன்னும் அந்த நிலையிலேயே இருக்கிறார்கள். எத்தனை பரிதாபம்!.
இன்னும் சிலர் டீ மற்றும் சர்க்கரை தூளைப்போல அக்கினியின் வேதனையின் மத்தியிலும், பிறரை உற்சாகப்படுத்துகிறவர்களாய் மகிழ்விக்கிறவர்களாய் மாறி விடுகிறார்கள். அவர்கள் பாடுகளில் பக்குவமடைகிறார்கள். உபத்திரவம் அவர்களை உருவாக்குகிறது. துன்பத்தில் துவண்டு விடாமல் தூயவரை இன்னும் நெருங்கி சேருகிறவர்களாய் மாறி விடுகிறார்கள். தாங்கள் பட்ட உபத்திரவங்களை மற்றவர்கள் படாதிருக்கும்படி அவர்களுக்கு ஒரு உதாரணமாக அவர்கள் மாறி விடுகிறார்கள்..
பிரியமானவர்களே, பாடுகள் நமக்கு கற்று கொடுத்திருக்கும் பாடம் என்ன? இன்னும் நம்மை கடினமுள்ளவர்களாய், முறுமுறுக்கிறவர்களாய் மாற்றியிருக்கிறதா? அல்லது பாடுகள் மூலமாய் பரலோகம் செல்லும் பாதையை கண்டுபிடித்துள்ளோமா? பொறுமையையும், நம்பிக்கையையும் பெற்று கொண்டிருக்கிறோமா? ‘அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்’ – (2 தீமோத்தேயு 2:12) என்று வேதம் கூறுகிறது. பாடுகளை சகிப்போம், சங்கீதக்காரனை போல உபத்திரவத்தில் மேன்மை பாராட்டுவோம். அதன் மூலம் தேவனுடைய பிரமாணங்களை கற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா! .

Comments