Saturday 1 October 2016

புதைந்திருக்கிற பொக்கிஷம்

பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. – (மத்தேயு 13:44).

பீட்டர் வாட்லிங் என்ற விவசாயி இங்கிலாந்து தேசத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் இவர் தனது விவசாய பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது வயல்வெளியில் சுத்தியல் ஒன்றை தொலைத்து விட்டார். அதை அப்படியே விட்டுவிட்டால் உழவு எந்திரங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்து அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பரந்து விரிந்த பண்ணையில் எங்கே தேடுவது? தனது நண்பர் எரிக் என்பவரிடம் உலோகத்தை கண்டறியும் கருவி ஒன்றின் மூலம் சுத்தியலை தேட ஆரம்பித்தார்
அப்பொழுது அவர்கள் ஆச்சரியப்படும் சம்பவம் நடந்தது. சுத்தியல் கிடைக்கவில்லை. ஆனால் 24 வெண்கல காசுகள், 565 தங்க காசுகள், 15,000 வெள்ளி காசுகள், 200 வகையான நகைகள் கிடைத்தன.
பிரிட்டனின் சட்டப்படி அவர்கள் முதலாவது காவல் துறையினருக்கு தெரியப்படுத்தினர். மறுநாள் அகல்வாராய்ச்சி நிபுணர்கள் குழு ஒன்று அங்கே வந்து ஆராய்ச்சி மேற் கொண்டனர்.
இந்த புதையல் இரண்டு பெரிய மரப்பெட்டிகளில் கி.பி. 408 ஆம் ஆண்டு புதைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் மரப்பெட்டிகள் சிதைந்து பொருட்கள் வெளிவந்துவிட்டன. பெட்டிகளை பூட்டியிருந்த இரண்டு வெள்ளி பூட்டுகளும் பூட்டியவாறு அங்கு கிடைத்தது. பிறபகுதிகளை தேடிபொழுது தொலைந்து போன சுத்தியலும் கிடைத்தது. அதையும் புதையலோடு சேர்த்து பிரிட்டனின் அரசாங்க அருங்காட்சியகத்திற்கு கொண்டு போய் விட்டனர்.
அந்நாட்டு சட்டப்படி இதுபோன்ற புதையலை கண்டுபிடிப்போருக்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் சந்தை மதிப்பை சன்மானமாக கொடுக்க வேண்டும். அவ்வாறு கிடைத்த 16 கோடி ரூபாயை பீட்டரும், அவருக்கு உதவி செய்த எரிக்கும் சரிசமமாக பங்கிட்டு கொண்டனர்.
இந்த புதையலை கண்டுபிடித்தவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை அல்லவா? இதை காட்டிலும் மேலான புதையலை தேவன் நமக்காக வைத்திருக்கிறார். பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதை கண்டுபிடிப்பவர்கள் அந்த புதையலை கிடைத்தவர் பட்ட சந்தோஷத்தை விட ஆயிரம் மடங்கு சந்தோஷமடைவார்கள்.
இந்த புதையலை பெற ஒரே ஒரு கண்டிஷன் மாத்திரம் உண்டு, அது இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும். அப்படி கழுவப்பட்டால், அவருடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை கண்டுபிடித்துவிட்டால், இந்த உலகமும், அதன் பணமும், சொத்தும், ஐசுவரியங்களும், எல்லா செல்வாக்குகளும் நமக்கு குப்பையாக தோன்றும். அவை யாவற்றிற்கும் மறுமையில் எந்த மதிப்பும் இல்லை என்கிற உண்மை புரியும்.
இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். அவருடைய மாசில்லாத இரத்தமே நம்மை பாவங்களற சுத்திகரிக்க முடியும். பரலோக இராஜ்யத்திற்கு நம்மை தகுதிப்படுத்தும். இன்றைக்கே கழுவி விட நம்மை அவருக்கு அர்ப்பணிப்போம். அவர் நம்மை சுத்தப்படுத்துவார். பரலோக ராஜ்யத்தின் பொக்கிஷத்தை தருவார். ஆமென் அல்லேலூயா!
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நீ பெற வேண்டும்
பரலோகத்தில் ஓரிடம் நீ பெற வேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத்தான் சிலுவையிலே இரத்தம் சிந்திவிட்டார்
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பரலோகத்தில் உள்ள பொக்கிஷங்களை இரட்சிக்கப்படுகிறர்களுக்காக வைத்திருப்பரே, எங்களது உண்மையான பொக்கிஷம் நீர் தானையா! உம்மை தரிசிக்க வேண்டுமென்றால் நாங்கள் பாவமில்லாதிருக்க வேண்டுமே. எங்கள் பாவங்களை தொலைக்க ஒரே வழி இயேசுகிறிஸ்துவின் இரத்தமே என்பதை அறிந்து, அவருடைய இரத்ததத்தால் கழுவப்பட எங்களை அர்ப்பணிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எங்கள் பாவங்களை கழுவி சுத்திகரிப்பதாக. பரலோக இராஜ்யத்திற்கு எங்களை தகுதிப்படுத்துவீராக. இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment