உயிர்த்தெழுதலுக்கு பாத்திரவான்கள்

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். – (1தெசலோனிக்கேயர் 4:16).

1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ம்தேதி மிச்சல் எனற இரண்டரை வயது சிறுபெண் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிறிய ஓடையில் விழுந்து விட்டாள். அதை கண்ட அவளது சகோதரன் தாயிடம் அதை தெரிவித்தான். உடனே அங்கு வந்த தாய் மகளை சுமார் பத்துநிமிடங்கள் தேடினாள். மகள் கிடைக்காததினால் அவசர தொலைப்பேசி எண் 911ஐ அழைத்தாள். அவர்கள் உடனடியாக அங்கு வந்து சிறு குழந்தையை தேடினர். கிடைக்கவில்லை. எனவே சிறிய ஓடைக்கு தண்ணீர் வருவதை நிறுத்தினர். நீர்மட்டம் குறைந்தவுடன் மிச்சலின் கை வெளியே தெரிந்தது. சிறிய பாறை ஒன்றில் சிக்கியிருந்த அவளை மீட்டெடுத்தனர். 60 நிமிடங்கள் மிகவும் குளிர்ந்த தண்ணீர்pல் மூழ்கி கிடந்ததினால் மூச்சு நின்று உடல் நீல நிறமாக மாறி போயிருந்தது. இதயத்துடிப்பு இல்லை. கண்கள் நிலை குத்தி போயிருந்தது. அவசர கால மருத்துவர்கள் முதலுதவியை செய்து பின்னர் மருத்துவமனைககு எடுத்து சென்றனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் அவளுடைய உடலை பரிசோதித்ததில் உடலின் உஷ்ணம் மிகவும் குறைந்திருந்ததை கண்டனர். சூடான திரவத்தை இரத்த நாளங்களில் ஏற்றினர். சூடான காற்றை நுரையீரலுக்குள் செலுத்தினர். மூன்று மணி நேரம் கடந்து விட்டது. அவள் அசைவில்லாமல் கிடந்தாள். இந்த சூழ்நிலையில் எந்த மருத்துவரும் அவள் இறந்து விட்டதாக அறிவித்து விடுவார். அவளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவர் போல்ட் என்பவரை எல்லாரும் பைத்தியக்காரன் என எண்ணினர். ஆனால் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கு அவர் கூறின மூன்று காரணங்கள், அவளுக்கு தலையில் அடிபடவில்லை. எலும்புகளில் ஒன்றும் முறியவில்லை. சிறுமியின் இரத்ததில் தேவையான ஆக்ஸிஜன் இருந்தது. எனவே அவள் பிழைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறி சிகிச்சையை தொடர்ந்தார். அவளது உடலை சூடுபடுத்துவதன் மூலம் உயிர் பிழைக்க வைக்க முயற்சிகள் செய்தார். கடைசியில் அவளது உடலில 66 டிகிரி பார்ன்ஹைட் உஷ்ணத்திலிருந்து 91 டிகிரி உஷ்ணத்தை அடைந்தபோது அவளது இதயம் வேலை செய்ய ஆரம்பித்தது. பிழைத்து கொண்டாள். அது ஒரு பெரிய அற்புதம் என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டனர்.
இது போன்ற அற்புதங்கள் எப்போதும் நடைபெறுவதில்லை. மரித்தவர்கள் உயிரோடெழும்பும் அற்புதம் வேதாகமத்திலும் எல்லா நேரங்களிலும் நடைபெறவில்லை. இயேசுகிறிஸ்து உயிரோடு எழுப்பினது மூன்று பேரை மாத்திரமே! அவர்களில் இரண்டு பேர் வாலிபர்கள், மற்றது ஒருசிறுபெண்ணே ஆவாள்.
மரணம் என்பது மிகவும் கொடியதாக இருக்கிறபோதிலும், நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நம்முடைய உறவினர்களையும், சொந்தங்களையும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர்களை மீண்டும் சந்திப்போம் என்பதே!
ஒரு நாள் வரும். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் யாவரும் முதலாவது எழுந்தரிப்பார்கள். அல்லேலூயா! அந்த உயிர்த்தெழுதலுக்குப்பின் மரணமே கிடையாது. அந்த உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவன் பாக்கியவான் என்று வேதம் கூறுகிறது. அப்படிப்பட்ட உயிர்த்தெழுதலுக்கு நாம் பாத்திரவான்களாக இருக்கிறோமா? கிறிஸ்துவுக்குள் இருந்தால் அந்த பாக்கியம் அப்படிப்பட்ட ஒவ்வொருவர்களுக்கும் கிடைக்கும்.
கர்த்தருடைய வருகை இப்போதிருந்தால் உயிரோடிருக்கும் நாமும் அவருக்கு எதிர்கொண்டு செல்வோம். அல்லேலூயா!
அழிவுக்கு உரிய இவ்வுடல் – ஒருநாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்கு உரிய இவ்வுடல் ஒருநாள்
சாகாமை அணிந்து கொள்ளும் 
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?
மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே? 
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு 
எனக்குள் வந்துவிட்டார்
சாவை அழித்து அழியா வாழ்வை 
எனக்குத் தந்து விட்டார்
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே மரணம் எங்கள் ஒவ்வொருவரையும் ஒரு நாள் சந்திக்கும் என்றாலும் உயிர்த்தெழுதலுக்கு பாத்திரவான்களாக நாங்கள் ஜீவிக்கும் இந்த நாட்களிலேயே உமக்கு உகந்தவர்களாக வாழ கிருபை செய்யும். சுhவாமையை அணிந்து கொள்ளும் நாள் வரும்வரைக்கும் கிறிஸ்துவுக்குள் வாழ இரக்கம் பாராட்டும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

Comments