Saturday 1 October 2016

கர்த்தர் நல்லவர்

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். – (சங்கீதம் 34:8).

ராபர்ட் கிப்ஸன் என்பவர் அமெரிக்காவிலுள்ள சேலம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். 1808 ஆம் ஆண்டில் இவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு திரும்ப வந்த பொழுது, தக்காளி விதைகளை கொண்டு வந்து அதை விதைக்கும்படி விவசாயிகளிடம் கொடுத்தார். அதை ஒரு அலங்கார செடியாகத்தான் அவர்கள் வளர்த்து வந்தனர்.
அச்சமயம் அமெரிக்காவிலுள்ள மருத்துவர்கள் அந்த பழத்தை பார்த்துவிட்டு, அது விஷம் நிறைந்த பழம், எனவே இதை உண்ணக்கூடாது என்று சொன்னபடியால், எவரும் அதை உண்ண முன்வரவில்லை.
பல ஆண்டுகள் கடந்தது. 1820ஆம் ஆண்டு ராபர்ட் கிப்ஸன் அநேக மக்கள் முன்னிலையில் பொது இடத்தில் தக்காளிப் பழத்தை உண்ணப்போவதாக அறிவித்தார். அந்த நாளில் அதை காண நூற்றுக்கணக்கான மக்கள் கூடி வந்தனர். அவர்களின் முன் தக்காளியின் சரித்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.
எகிப்தியர்களும், கிரேக்கர்களும் முதலாவது தக்காளியை உண்ண ஆரம்பித்தனர். அங்கிருந்து அது மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளுக்கும், பின்னர் ஐரோப்பாவிற்கும் சென்றது. அங்கிருந்துதான் அவர் அதை அமெரிக்காவிற்கு கொண்டு வந்ததாகவும் கூறினார்.
அதை சொல்லி முடித்தவுடன் தக்காளி ஒன்றை கையிலெடுத்து உயர்த்தி காட்டினார். பின்னர் ‘ஒரு நாள் வரும், அப்பொழுது இந்த அழகான சத்து நிறைந்த பழம் மாபெரும் விவசாய தொழிலாக மாறும். இப்பழத்தை அவித்து அல்லது பச்சையாகவும் உண்ணலாம். அது விஷம் நிறைந்த பழம் அல்ல என்று நிரூபிக்க உங்கள் கண்முன் இதை சாப்பிடப்போகிறேன்’ என்றார்.
அவர் தக்காளி ஒன்றை எடுத்து வாயின் அருகில் கொண்டுவந்ததும் எங்கும் ஒரே நிசப்தம். கூட்டத்தில் அதை பார்த்து கொண்டிருந்த ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். ராபர்ட் அதை சுவைத்து சாப்பிட ஆரம்பித்தார். அது முடிந்ததும் அடுத்த தக்காளி ஒன்றை எடுத்து சுவைத்தார். அவர் மயங்கி விழுவார், அல்லது மரித்து கீழே விழுவார் என்று மக்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை. கூட்டத்திலிருந்தவர்களையும் அதை சுவைத்து பார்க்கும்படி அழைத்தார். தைரியமான சிலர் சென்று சுவைத்தனர். இப்போழுது அமெரிக்கா மட்டுமல்ல, உலக முழுவதிலும் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த தக்காளி உணவாக உட்கொள்ளப்படுகிறது. தக்காளி அமெரிக்காவிற்கு சென்ற கதை இதுதான்.
‘கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ என்று தெளிவாக வேதம் நமக்கு சொல்லுகிறது. நாம் அவரை ருசித்து பார்த்திருக்கிறோமா? ருசித்திருந்தால் நம்மால் சும்மா இருக்கவே முடியாது. அதை யாரிடமாவது சொல்லி அவர்களையும் ருசிக்க வைக்க தூண்டும்.
கர்த்தர் அத்தனை நல்லவர். நான் ருசித்து பார்த்ததினால் என்னால் அடித்து கூற முடியும் அவரை போல நல்ல தேவன் யாருமில்லை என்று. ருசித்து பார்க்காதவர்கள் அவருடைய நன்மைகளையும், அவருடைய மகத்தான கிருபைகளையும் உணராதிருக்கிறார்கள்.
கர்த்தர் நல்லவர் என்று ருசித்து பார்த்த நாம், அவரை ருசிக்காத மற்றவர்களுக்கு அவர் நல்லவர் என்று எடுத்து சொல்லுவோமா? அவர்களும் ருசித்து பார்க்கட்டும், கர்;த்தர் நல்லவர் என்று சொல்லட்டும். ஆமென் அல்லேலூயா!
உம்மை போல நல்ல தேவன் யாருமில்லையே
உம்மை போல வல்ல தேவன் யாருமில்லையே
உம்மை போல என்னை தேற்றிட
உம்மை போல என்னை காத்திட
உம்மை போல என்னை நேசிக்க 
யாருமில்லையே இயேசுவே யாருமில்லையே
ஜெபம்: எங்கள் அன்பின் பரம தகப்பனே, நீர் நல்லவர் என்பதை ருசித்து பார்த்த நாங்கள் எத்தனை பாக்கியவான்கள்! உம்மேல் நம்பிக்கை வைத்திருக்கிற ஜனங்களாகிய நாங்கள் எத்தனை பாக்கியவான்கள்! உம்மை போல எங்களை ஆற்றிட, தேற்றிட, விசாரிக்க, நேசிக்க யாரும் இல்லை தகப்பனே. அத்தனை நல்ல தேவனை நாங்களும் உளமாற நேசிக்க கிருபை தாரும். மற்றவர்களுக்கும் உம் அன்பை ருசித்து பார்க்க நாங்கள் சொல்ல கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment