Saturday 1 October 2016

வற்றாத தேவநதி

தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். – (சங்கீதம் 65:9).

நமது நாட்டிற்கு பக்கத்தில் மாலத்தீவு என்று ஒரு நாடு இருக்கிறது. அதன் தலைநகர் மாலே என்பதாகும். இச்சிறிய நகரில் சுமார் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேர் வசிக்கின்றனர். இது சிறந்த இடம் என்பதால் வருடத்திற்கு பத்து இலட்சம் உல்லாச பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நாடு சந்திக்கும் பிரச்சனைகளில் மிகப்பெரியது குடிநீர் பிரச்சனையாகும். கடல்நீரை துப்புரவாக்கி உபயோகிக்கின்றனர். மழைநீரை சேமித்தும் வைத்து பயன்படுத்துகின்றனர்.
இரண்டு வருடத்திற்கு முன்னால் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பெரிய கோளாறினால் குடிநீர் தட்டுபாடு வந்தது. இந்த தட்டுபாடு சில நாட்களாக தொடர்ந்து நீடித்ததால் கடைகளை உடைத்து, அங்கிருந்த குடிநீர் பாட்டில்களை எடுத்து விநியோகித்து பயன்படுத்தினர். ஆனாலும் தேவை அதிகரிக்கவே, இந்தியா பத்து விமானங்களிலும், சில கப்பல்கள் மூலமாகவும் தண்ணீரை எடுத்து சென்று விநியோகித்தது.
சீனா அமெரிக்க நாடுகளிலிருந்தும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டன. ஏழு நாட்கள் கழித்து பிரச்சனை தீர்க்கப்பட்டது. அந்த அவசர காலத்தில் உதவின நாடுகளுக்கு அந்நாட்டின் பிரதமர் நன்றி கூறினார்.
‘நீரன்றி அமையாது உலகு’ என்பது நம் நாட்டில் வழங்கும் மொழி. தண்ணீர் இருந்தால் எல்லா வளமும் இருக்கும் என்பது பொருள். சமீபத்தில் நான் நாகர்கோயிலுக்கு முதன்முறையாக சென்றபோது, அங்கிருந்த தண்ணீர் வளத்தை கண்டு பிரமிப்படைந்தேன். குட்டி பரலோகம் போல காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் பசுமை, நீர் நிரம்பியிருந்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று மிகுந்த சந்தோஷம் அடைந்தேன்.
தினந்தோறும் நாம் குளிக்கும்போதும், சமைக்கும்போதும் நமக்கு தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்கிறது என்றால் அது தேவனுடைய கிருபையே. எத்தனையோ இடங்களில் தண்ணீர் தட்டுபாடு, குடிநீர் எடுத்து வர எத்தனையோ தூரம் குடங்களை தூக்கி கொண்டு போய் கொண்டு வர வேண்டும். ஆனால் நமக்கு எளிதாக கிடைக்கிறது என்றால் அது தேவனுடைய பெரிதான கிருபையே!
தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்திஇ அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர் என்று வசனம் தெளிவாக கூறுகிறது. அவரே நமக்கு தண்ணீரை தருகிறார்.
அதே போல நமக்கு தேவநதியாகிய ஆவியானவரையும் அருளி நம் ஆத்துமாவை செழிப்பாக்குகிறார். ஆவியானவர் நதியாக நம் இருதயத்திற்குள் வரும்போது, கறைதிறை எல்லாம் சுத்தமாகி, பரிசுத்தமாக மாற்றுகிறார்.
சிலர் ஆவியானவரின் அபிஷேகம் என்றால் அந்நிய பாஷையில் பேசுவது மட்டும்தான் என்று நினைத்து கொள்கிறார்கள். ஆவியானவர் வரும்போது நமது வாழ்க்கையில் ஒன்பது ஆவியானவரின் வரங்களை அவருடைய சித்தத்தின்படி நமக்கு கொடுத்து அலங்கரிக்கிறார். அதுமட்டுமல்ல, ஒன்பது கனியையும் நம் வாழ்வில் கொடுக்க உதவி செய்கிறார்.
ஆவியானவர் வரும்போது மாத்திரமே நாம் பரிசுத்தமாய் வாழ முடியும். மாம்சத்தில் நம்மால் ஒருபோதும் நூறு சதவிகிதம் பரிசுத்தமாய் வாழ முடியாது. ஆனால் ஆவியானவர் வரும்போது, நம்மை பரிசுத்தமாய் வாழும்படி அவர் நமக்கு பாவத்தை குறித்தும், நியாயத்தீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்துகிறார்.
தண்ணீர் தட்டுபாடு வரும்போது எப்படி தவிக்கிறோமோ, அப்படியே ஆவியானவரை நாம் துக்கப்படுத்தினால் நம் இருதயமும் தவிக்கும். அவருடைய பிரசன்னத்தை இழந்து சமாதானமாய் வாழவே முடியாது.
ஆவியானவரின் அற்புத அபிஷேகத்தை பெற்று கொள்வோம். அவருக்கு சாட்சியாக வாழ்வோம். வற்றாத ஜீவநதியாக அவர் நம் வாழ்வை சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நிரப்புவார். ஆமென் அல்லேலூயா!
ஜீவ தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாரும் ஐயா போதகரே
வற்றாத ஜீவ நதியாக
கணுக்கால் அளவு போதாதையா 
முழங்கால் அளவும் போதாதையா
இடுப்பு அளவும் போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே
நான் மிதந்து மிதந்து மகிழணுமே
ஜெபம்: எங்கள் அன்பு நேச தகப்பனே, நீர் எங்களுக்கு தடையில்லாமல் எளிதாக கொடுக்கிற நல்ல தண்ணீர் வசதிகளுக்காக உம்மை துதிக்கிறோம் ஐயா. எத்தனையோ நாடுகளில் குடிக்க நல்ல தண்ணீர் கிடையாதபோது எங்களுக்கு நீர் கொடுத்து வருகிற நல்ல தண்ணீருக்காக உமக்கு ஸ்தோத்திரம். அதுப்போல நீர் எங்களுக்கு கொடுத்த வற்றாத ஜீவ நதியான ஆவியானவருக்காக கோடி ஸ்தோத்திரம். அவரை ஆவலோடு பெற்று கொண்டு பரிசுத்தமாக வாழ எங்களுக்கு உதவி செய்யும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

1 comment:

  1. Lucky Eagle Casino & Hotel - JTHub
    Visit 공주 출장마사지 JTHub and 고양 출장안마 experience the thrills of casino gaming with JT, including our 1871 아산 출장안마 Lucky 대전광역 출장샵 Eagle Casino & 충청북도 출장마사지 Hotel in Lincoln, MO.

    ReplyDelete