மரித்தோரின் பட்டணம்

நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.– (வெளிப்படுத்தின விசேஷம் 3:1).

கி.பி. 642 ஆம் ஆண்டு எகிப்தை கைப்பற்றிய அரபிய படைதளபதி ஆம்ரிபின் அலாஸ் என்பவர் தலைநகரம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு அல் புஸ்டாட் என பெயரிட்டார். அவரது குடும்பத்தினருக்கு தேவைப்பட்ட கல்லறை தோட்டத்தை மொக்காட்டம் என்று அழைக்கப்பட்ட குன்றின் அடிவாரத்தில் அமைத்தார். அது இப்பொழுது எகிப்து தேசத்தின் தலைநகரான கெய்ரோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது.
அவர்கள் கல்லறைகளை வீடுகள் போன்று கட்டினர். சில கல்லறைகளில் இரண்டு மூன்று அறைகள் இருக்கும். காலப்போக்கில் சில கல்லறைகளை சுற்றிலும் வீடுகள் கட்டப்பட்டன. கெய்ரோ பட்டணம் நவீன மயமாக்கப்பட்டபொழுது சிறு வீடுகளும், கட்டடங்களும் இடிக்கப்பட்டடு, அங்கிருந்த ஏழை எளிய ஜனங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். எனவே அவர்கள் குடிபெயர்ந்து இந்த கல்லறை வீடுகள்pல் குடியேறினர். சிலர் கல்லறை வீடுகளுக்கு இடையில் கிடைத்த நிலத்தில் வீடுகளும் கட்டி கொண்டனர்.
1992 ஆம் ஆண்டு கெய்ரோவில் பெரிய பூமி அதிர்ச்சி உண்டானபோது அநேகர் வீடுகளை இழந்தனர். அவர்கள் தங்கள் குடும்ப கல்லறைகளில் குடியேறினர். கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக கெய்ரோவுக்கு வருபவர்களும் இப்பகுதியில் குடியேறுகின்றனர். இப்போது இந்த நெருக்கடியான இடத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இந்த இடத்தை மரித்தோரின் பட்டணம் என்று அழைக்கின்றனர். இப்பட்டணத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைகளும், அழுக்கும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்கள் தங்களை சுற்றியுள்ள கல்லறைகளுக்கு மத்தியில் வேலை செய்கிறார்கள். உணவு சமைத்து உண்கிறார்கள். தூங்குகிறார்கள். அங்கே வசிப்பவரிடம், சுற்றி பார்க்க சென்ற ஒருவர் கேட்டதற்கு இறந்தவர்களோடு வாழ்வது நல்லது, ஏனென்றால் அவர்கள் பேசுவது கிடையாது. இங்கு அமைதியான சூழ்நிலை நிலவுகிறது என்று சொன்னார். மரித்தோருடன் வசிக்கும் மாபெரும் ஜனக்கூட்டம் இங்குள்ளது.
நமக்கு கூட சில நேரங்களில் செத்தவர்களோடு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு. ‘குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்’ (1யோவான் 5:12) என்று வேதம் கூறுகிறது. இயேசுகிறிஸ்து இல்லாமல் வாழும் ஒவ்வொருவரும் செத்தவர்களே! நான் இதை கூறவில்லை. வேதம் கூறுகிறது. அவர்களும் தேவனுடைய குமாரனை பற்றி கொள்ளும்படி நாம் ஜெபிக்க வேண்டுவது நம் கடமையல்லவா?
‘விவேகத்தின் வழியை விட்டு தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்’ (நீதிமொழிகள் 21:16) என்று வேதம் கூறுகிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? நாம் செத்தவர்களின் கூட்டத்தில் வாழ்கிறோமா? ஆவிக்குரிய வாழ்வில் செத்தவர்களாக திரிந்து கொண்டிருக்கிறோமா? செத்தவர்களுக்கும், உயிரோடு இருக்கிறவர்களுக்கும் இடையில் நாம் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
‘மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்’ (சங்கீதம் 115:18) என்று வேதம் கூறுகிறது. நாம் கர்த்தரை துதியாமல் இருந்தால் நாமும் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்போம். மரித்தவர்களிடம் பேச்சு கிடையாது, அவர்கள் கர்த்தரை துதிக்க முடியாது. நமக்கு தேவன் கொடுத்திருக்கிற இந்த நல்ல நாட்களிலேயே அவரை நம் இருதயத்தை நன்றியால் நிறைத்து, நாவாலே துதித்து மகிமைப்படுத்துவோம். ஜீவனுள்ளோர் தேசத்திலே அவரை துதிப்போம். அவர் மகிமைப்படுவார். ஆமென் அல்லேலூயா!
நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
துன்மார்க்க ஏதுவான வெறி கொள்ளாமல்
தெய்வபயத்தோடு என்றுமே
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன்கிடைக்கும்
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உயிருள்ளவர்கள் என்று எண்ணப்பட்டாலும், செத்தவர்களாக கிறிஸ்து இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் தகப்பனே. ஒவ்வொருவரையும் சந்திப்பீராக. கிறிஸ்து ஏற்றுக்கொள்ளும்படி கிருபை செய்யும். மரித்தவர்கள் உம்மை துதியார்களே, நாங்கள் எப்போதும் உம்மை துதிக்கிறவர்களாக வாழ கிருபை செய்யும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்

Comments