தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். – (சங்கீதம் 36:7).
2012 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சுழல் சூறாவளி காற்று தாக்க ஆரம்பித்தது. சுமார் 270 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று சுழன்று வீசி கொண்டே நகர்ந்து வந்ததால், அதன் வழியிலிருந்த வீடுகள், கடைகள் யாவற்றையும் தரைமட்டமாக்கி கொண்டே வந்தது. தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரஙகள் வேரோடு சரிந்து கிடந்தன.
இது நடந்து கொண்டிருக்கும்போது, ஆபத்தை உணர்ந்த ஸ்டெபானி டெக்கர் என்ற தாயார் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் அனைவரும் மரிக்க வேண்டியதுதான் என்று உடனடியாக செயலில் இறங்கினாள். அதற்குள் வெளியில் மோதி வெடித்ததுபோல் சத்தம் கேட்டது, வீடு உடைந்து விழ ஆரம்பித்தது.
டொமினிக் என்ற எட்டு வயது மகனையும், ரீஸ் என்னும் ஐந்து வயது மகளையும் கூட்டி கொண்டு வீட்டின் கீழ்தளத்திற்கு விரைந்தாள். அவர்களை கம்பளி போர்வையால் மூடி, அவர்கள் மீது படுத்துக்கொண்டாள்.
தட்டுமுட்டு சாமானங்கள் அவள் மீது விழ அரம்பித்தது. பிள்ளைகள் பயத்தில் சத்தமிட ஆரம்பித்தனர். அம்மாவற்கு வலி தாங்க முடியவில்லை. எலும்புகள் முறிந்தன. கால்கள் உடைந்து இரத்தம் பீறிட்டு வர ஆரம்பித்தது. சத்தமிட்டு அழுதால் பிள்ளைகள் பயந்து விடுவார்கள் என்று எல்லாவற்றையும் சகித்து கொண்டாள்.
சிலமணி நேரங்கழித்து சுழல் காற்று கடந்து சென்றவுடன், எட்டுவயது மகளை வெளியல் அனுப்பி உதவிக்கு ஆட்களை அழைத்து வருமாறு அனுப்பினாள். அவன் தைரியமாக வெளியில் சென்று ஒரு மனிதனை கூட்டி வந்தான். அவசர ஊர்தி கிடைக்காததால். அவரது காரில் பலத்த அடிபட்டு கிடந்த ஸ்டெபானியை எடுத்து சென்றார். மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை எடுத்து அவர்கள் குணமானார்கள். பிள்ளைகள் இருவரும் தாயின் அரவணைப்பில் இருந்ததால் எந்த காயமுமின்றி தப்பித்து கொண்டனர்.
‘கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்’ (மத்தேயு 23:37) என்ற வசனத்தின்படி, ஒரு கோழி எப்படி தன் சிறகுகளின்கீழ் பயங்கரங்கள் வரும்போதும், எதிரிகளோ, மற்ற எதுவும் தாக்க வரும்போதும் தன் குஞ்சுகளை சேர்த்து கொள்ளுமோ அதுபோல கர்த்தர் நம்மை காத்து கொள்ளுகிறார்.
சத்துரு எப்போதும் நம்மை கீழே தள்ளும்படி தீவிரித்து கொண்டுதான் இருக்கிறான். ஆனால் அவன் தாக்க வரும்போது, சத்துரு வெள்ளம் போல வரும்போது ஆவியானவர் அவனுக்கு எதிராக கொடி ஏற்றுவார். அதுபோல தேவன் நம்மை சுற்றிலும் தம்முடைய செட்டைகளை விரித்து நம்மை பாதுகாக்கிறார். ஆந்த தாய் எப்படி தான் அடிபட்டாலும் பரவாயில்லை, என் பிள்ளைகள் காக்கப்பட வேண்டும் என்று அவர்களை மூடி மறைத்து காத்து கொண்டாளோ அதுபோல நம் பரம தகப்பனும் நம்மை தம் கிருபையால் மூடி மறைத்து காத்து கொள்கிறார். அல்லேலூயா!
தேவனுடைய செட்டைகளின் கீழே நாம் அடைக்கலம் கொள்ளும்போது சத்துரு நம்மை சேதப்படுத்த முடியாது. தாக்க முடியாது. பலவீனப்படுத்தும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்கள் நம்மை தாக்க முடியாது. மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரம் நம்மை ஒன்றும் செய்யாது. அல்லேலூயா! ஒவ்வொரு நாளும் காலையில் ஜெபிக்கும்போது, அவருடைய செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுந்து கொள்ளுகிறோம் என்று சொல்லி ஜெபிப்போம். அந்த நாள் முழுவதும் அவர் நம்மை காத்து கொள்ள வல்லவராகவே இருக்கிறார். ஆமென் அல்லேலூயா!
தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனை போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை
மகிழ்வோம் மகிபனை போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் வந்தடையும் தஞ்சமாக உமது செட்டைகளின் நிழல் இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உம்முடைய செட்டைகளின் நிழலிலே எங்களை வைத்து காத்தருளும். உம்முடைய செட்டைகளின் கீழே அடைக்கலமாக வந்த எங்களை நீர் காத்து கொள்வதற்காக நன்றி. இயேசுகிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
Really good.
ReplyDelete