Saturday 1 October 2016

விசுவாச கப்பல்..

இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். – (1 தீமோத்தேயு 1:8).

இத்தாலி நாட்டை சேர்ந்த உல்லாச பயணிகள் கப்பலாகிய ‘கோஸ்டா கன்பார்டியா’ 3206 பயணிகளையும், 1023 கப்பல் ஊழியர்களையும் ஏற்றி கொண்டு துறைமுகத்திலிருந்து 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி இரவு புறப்பட்டது. சுமார் 800 மீpட்டர் தூரம் பயணித்த சமயத்தில் கடலுக்கடியில் உள்ள பாறை ஒன்றில் பலமாக மோதியதில் தண்ணீர் மேற்பரப்பிலிருந்து 26 அடி ஆழத்தில் 160 அடி நீளத்திற்கு அடிப்பாகத்தில் கப்பலை மூடியிருந்த இரண்டு கனமான இரும்பு தகடுகள் அப்படியே கழன்று போயின.
இந்த பழுதினால் கப்பலின் இயந்திர அறைக்குள் தண்ணீர் புகுந்து எந்திரம் இயங்குவது நின்றது. மின்சாரம் உற்பத்தி செய்யும் எந்திரங்களும் தண்ணீரில் மூழ்கினதினால் மின்சாரம் தடைப்பட்டது.
பின்னர் கப்பல் ஒருபுறமாக சரிந்து பாதி கப்பல் தண்ணீருக்குள் மூழ்கி விட்டது. இந்த விபத்தில் 32 பேர் மரித்தனர். 64 பேர் காயமடைந்தனர்.
அதை மீட்க வந்தவர்கள் முதலாவது கப்பலில் இருந்த எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை அகற்றிவிட்டு, கடலுக்குள் விழுந்த கிடந்த இந்த கப்பலை மீண்டும் நேராக்கி, மிதக்க வைத்தனர்.
இரண்டு இழுவை கப்பல்கள் மூலம் 2014 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இத்தாலியிலுள்ள ஜெனோவா என்ற துறைமுகத்தில் சேர்த்தனர். அங்கே இது உடைக்கப்பட்டு, அதின் பாகங்கள் பழைய இரும்பு கடைக்கு விற்கப்பட்டது.
3420 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான கப்பல் கடைசியில் பழைய இரும்பு விலைக்கு விற்க வேண்டிதாயிற்று. விழுந்த கிடந்த கப்பலை நேராக்கவும், அதை இழுத்து கொண்டு சென்று துறைமுகத்தில் சேர்ப்பதற்கும் 12,000 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிதாயிற்று. எத்தனை தேவையற்ற செலவுகள்! ஒருவேளை கவனமாக கப்பல் செலுத்தப்பட்டிருந்தால் பாறையின் மீது மோதாமல் தடுத்திருந்திருக்கலாம்!
நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள் என்று பவுல் அப்போஸ்தலன் விசுவாசத்தை ஒரு கப்பலுக்கு ஒப்பிட்டு கூறுகிறார். விசுவாசமானது நல் மனசாட்சியுடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த நல்ல மனசாட்சியை தள்ளிவிடுவதாலேயே அநேகருடைய விசுவாச வாழ்க்கையிலே சேதங்களும், போராட்டங்களும், நஷ்டங்களும் ஏற்படுகின்றன.
பிரியமானவர்களே நாம் அனைவரும் பரம கானானை நோக்கி, விசுவாசம் என்னும் கப்பலின் மூலம் பயணித்து கொண்டிருக்கிறோம். போகும் வழியில் விசுவாச சோதனைகள் ஏற்படலாம். நம் விசுவாசத்தை சிதறடிக்கும் வண்ணம் போராட்டங்களும் வரலாம். ஆனால் நாம் நல் மனசாட்சியோடு நமக்கு வரும் போராட்டங்களை சந்திப்போமானால், கர்த்தர் நம்மோடிருந்து, நமக்கு வெற்றியை தருவார்.
ஆனால் இமெனேயும், அலெக்சந்தரும் துர்மனசாட்சியினால் விசுவாச கப்பலை சேதப்படுத்தினார்கள் (20ம் வசனம்) என்று வேதம் சொல்லுகிறது. நாம் அப்படிப்பட்டவர்களாக இல்லாமல் நல்மனசாட்சியோடு விசுவாசத்தை காத்து கொள்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!
விசுவாச கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்தபோதும் தென்றல் வீசும் போதும்
அசையாமல் செல்கின்றது அக்கரை நோக்கி
பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பார சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே விசுவாச கப்பலிலே பயணிக்கிற ஒவ்வொருவரும் பத்திரமாக தரை இறங்கும்படி, பரமன் வாழும் பரத்தை சென்றடையும்படி அவர்கள் நல்மனசாட்சியை காத்து கொள்ள கிருபை தாரும். எந்த போராட்டங்கள், பாடுகள் வந்தாலும் விசுவாசத்தை காத்து கொள்ள கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment