இயேசு கிறிஸ்துவும் அவருடன் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீஷர்களும் மறுரூப மலையிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்திருந்தார்கள். அந்த அனுபவம் இன்னும் அவர்கள் இருதயத்திலிருந்து அகலாதிருந்தது. மோசேயும், எலியாவும் அங்கு இயேசுவுடன் பேசி கொண்டிருந்ததை நேரில் அந்த சீஷர்கள் கண்டிருந்தனர். இயேசுவின் முகம் சூரியனை போல பிரகாசித்திருப்பதை நேரில் கண்டிருந்தனர். ‘ஆஹா! என்ன ஒரு உன்னத அனுபவம் அது! அதிலேயே அப்படியே இருந்து விட்டால் எத்தனை நலமாயிருக்கும்’ என்று யோசித்தபடியே, அவர்கள் அந்த நினைப்புடனே கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் அப்படி இறங்கி ஜனங்களிடத்தில் வந்தபோது, நிஜ வாழ்க்கையின் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொரு மலை அனுபவத்திற்கு பிறகும் நிச்சயமாக ஒரு பள்ளத்தாக்கின் அனுபவம் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு வேளை ஒரு அருமையான நற்செய்தி கூட்டத்திற்கு சென்று, அங்கு பிரசங்கியாரின் பிரசங்கத்தையும், தேனிலும் இனிதான பாடல்களையும் கேட்டு விட்டு, வீடு வந்து சேரும்போது, ஒருவேளை நாம் நிஜ வாழ்க்கையின் நிஜங்களை உணரும்போது, அட, இதுதான் உண்மையான வாழ்க்கை! என்று நினைக்க தோன்றும். அப்படியே அந்த கூட்டங்களிலேயே இருந்தால் எத்தனை சந்தோஷம்! எத்தனை சமாதானம்! ஆனால், நாம் வாழ போவது, யதார்த்தமாய் இருக்க போவது நாம் வாழ போகிற வாழ்க்கைதான். நாம் சந்திக்க இருக்கிற பிரச்சனைகளைதான்.
‘இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது’ – (மத்தேயு 3:16-17).இயேசுகிறிஸ்து நினைத்திருக்கலாம், பிதாவுடனும், பரிசுத்த ஆவியானவருடனும் இருக்கும் இந்த அனுபவமல்லவா, ஐக்கியமல்லவா நான் பரலோகில் கொண்டிருந்தேன் என்று. ஆனால் அந்த உன்னத அனுபவத்திற்கு பின், உடனே அவர் சாத்தானுடன் சோதனையை சந்திக்க வேண்டியிருந்தது. உயர உன்னதமான அனுபவத்திற்கு பிறகு, பள்ளத்தாக்கை போன்ற நம்மை திணற வைக்கும் சோதனைகள் நமக்காக காத்திருக்கலாம்! கிறிஸ்து சாத்தானை வேத வார்த்தைகளால் ஜெயித்தார். மறுரூப மலையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, சீஷர்களுக்கு சந்திர ரோகியாய் தவிக்கும் அந்த மகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் இயேசுகிறிஸ்து அவனை கொண்டு வரசெய்து, அவனிலிருந்த பிசாசை அதட்டினார். அது உடனே அவனை விட்டு அகன்றது. இயேசுகிறிஸ்து உன்னத அனுபவத்திற்கு பின் வரும் பள்ளத்தாக்கை போன்ற சோதனைகளையும், பிரச்சனைகளையும் எளிதாய் சந்தித்தார். பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்.
நாமும் எப்போதும் உயர உன்னதமான அனுபவங்களிலேயே இருந்து விட முடியாது. கீழே பள்ளத்தாக்கை போன்ற சோதனைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கத்தான் வேண்டும். அதில்தான் நாம் கர்த்தருக்கு கீழ்ப்படிதலையும், அவர் மேல் சார்ந்து ஜீவிக்கிற ஜீவியத்தையும் பெற்று கொள்கிறோம். அவரில் அதிகமாய் அன்பு கூர்ந்து வாழ கற்று கொள்கிறோம். நாம் கண்டு அல்ல, காணாமல் அவரை விசுவாசிக்கிறவர்கள். நாம் தான் அதிக பாக்கியவான்கள்.
நம்மை ஊக்குவிக்க தேவன் அவ்வப்போது அருமையான வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும், அனுபவங்களையும் தருகிறார். ஆனால் அதிலேயே நாம் நின்று விடக்கூடாது. நின்று விட முடியாது. பள்ளத்தாக்கின் அனுபவத்தினூடே செல்லும்போது, தேவன் நம்மோடு கூட இருப்பதை உணர்ந்து, அவரில் களிகூர்ந்து, ஜெயம் பெற்று வாழும் வாழ்க்கையே உன்னத வாழ்க்கையாகும். அப்படிப்பட்ட வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
‘நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது’ – (ஏசாயா 43:2) என்று வாக்களித்த தேவன் நம் ஆறுகளை போன்ற பிரச்சனைகளிலும், அக்கினி போன்ற அனுபவங்களிலும் நம்மோடு இருக்கும்போது, நாம் பள்ளத்தாக்கின் அனுபவத்திலும் களிப்போடு கடந்து வர அவர் உதவி செய்வார். ஏனெனில் ஆறுகளை கடக்கும்போது, அவர் படகாய் வந்திடுவார். அக்கினியில் இருக்கும்போது நான்காவது ஆளாக அவர் வந்து, அக்கினியின் வாசம் கூட நம்மீது வீசாதபடி வெளியே பத்திரமாய் கொண்டு வருவார். அல்லேலூயா!
ஒரு நாள் இயேசுகிறிஸ்து வருவார். அவர் நம்முடைய கண்ணீரை துடைப்பார். ‘பள்ளத்தாக்கில் வாழ்ந்த வாழ்க்கை போதும்’ என்று அன்போடு நம்மை உயர்ந்த பரலோக வாழ்க்கைக்கு கொண்டு செல்வார். அங்கு சோதனையோ, பிரச்சனைகளோ, துன்பங்களோ, பள்ளத்தாக்கின் எந்த அனுபவங்களும் இல்லை. நாம் திரும்ப பள்ளத்தாக்கின் வாழ்க்கைக்கு வரவே மாட்டோம். உயர்ந்த உன்னத மலை போன்ற அனுபவத்திலேயே என்றென்றும் வாழுவோம். ஆமென் அல்லேலூயா!
அலைகள் படகின்மேல் மோதியே ஆழத்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து கர்த்தரே என்னைத் தூக்கினார்
அல்லல் நீக்கியவர் அமைதிப்படுத்தினார்
இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து காலமெல்லாம் பாடுவேன்
அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்
ஜெபம் :
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பள்ளத்தாக்கை போன்ற இருளான சோதனைகளும், பிரச்சனைகளும் எங்கள் வாழ்வில் வரும்போது, அவைகளை விட்டு எங்களுக்கு உயர்ந்த மலையின் அனுபவத்திற்குள் சென்று அங்கேயே இருந்து விட தோன்றினாலும், பள்ளத்தாக்கின் அனுபவத்தில் நீர் எங்களுடனே கூட இருக்கிறீர் என்கிற முழு விசுவாசத்தோடு, பள்ளத்தாக்கின் வாழ்வை கிறிஸ்துவை போல வெற்றிகரமாக முடிக்க எங்களுக்கு தேவன் கிருபை செய்வீராக. நீர் எங்களோடு எப்போதும் இருக்கிறீர் என்கிற விசுவாசம் ஆழமாய் எங்கள் இருதயத்தில் பதித்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.