Skip to main content

ஜாக்கிரதையுள்ளவனுடைய கை

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான். – (நீதிமொழிகள் 12:24).
ஹெச்.சி.எல் என்ற நிறுவனம் கம்பியூட்டர் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தை துவங்கிய சிவா என்பவர் 1945 ஆம் ஆண்டு திருச்செந்தூருக்கு அருகாமையிலுள்ள மூலைப்பொழி என்ற கிராமத்தில் பிறந்தவர். தினத்தந்தி என்ற நாளிதழின் நிறுவனர் ஆதித்தனாரின் சகோதரியின் மகன் ஆவார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றபின்னர் கோயம்புத்தூரில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். 1976ஆம் ஆண்டு இந்தியாவில் கம்பியூட்டர் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். அந்த சமயத்தில் முழு இந்தியாவிலும் 250 கம்பியூட்டர்களே இருந்தன.
அந்த நாட்களில் கம்பியூட்டர் என்ற வார்த்தையையே அநேகர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அது ஒரு தேவை என்பதை விட ஆடம்பரமாக கருதப்பட்டது. சாதாரண கம்பியூட்டர்கள் உலக சந்தையில் லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையானது. இவைகளை செய்வதற்கான உதிரி பாகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாயிருந்தது. அதற்கு இந்திய அரசாங்கத்தில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தன.
இந்த சூழ்நிலையில் அவர் தனது குழுவுடன் சேர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனத்தை துவங்கினார். முதலாவது சாதாரண வருமானத்தை முதலீடு செய்து, கம்பியூட்டர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்திய அரசாங்கம் சில விதிமுறைகளை தளர்த்தியதால் உதிரி பாகங்களை எளிதாக இறக்குமதி செய்ய முடிந்தது.
பின்னர் இந்த நிறுவனம் படிப்படியாக பல சவால்களை கடந்து, வளர்ந்து, இன்று அதன் வருடாந்திர வரவு செலவு 41,450 கோடியாக ரூபாய்களாக உயர்ந்து இருக்கிறது.
ஒரே நாளில் இந்த உச்சத்தை அவர் எட்டவில்லை. பல ஆண்டுகளாக பல சவால்களை சந்தித்து, கடினமாக விடாமுயற்சியுடன் உழைத்ததாலும், தொழிலாளிகளின் ஒத்துழைப்பாலும் இது சாத்தியமாயிற்று.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும் என்பது எல்லாருடைய ஆசையாகவும் இருக்கிறது. இந்த ஆசையை எட்ட பல சவால்களை சந்தித்தல், பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு, உண்மை ஆகியவை தேவைப்படுகிறது. கிறிஸ்துவை பின்பற்றுகிற நமக்கும் முன்னேற மேற்கூறியவைகள் விதிவிலக்கல்ல. நம்முடைய இந்த முயற்சிகளோடு, தேவ கிருபையும் தயவும் இணையும்போது நாமும் அநேகருக்கு ஆசீர்வாதமுள்ளவர்களாக மாற முடியும்.
ஒரு சாதாரண மனிதன் தன் உழைப்பால், ஞானத்தால் முன்னேறி, இந்தியாவிற்கு பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, ஆசீர்வாதமாக இருக்க முடியுமென்றால், ஜீவனுள்ள தேவனை தெய்வமாக கொண்டிருக்கிற நாம், தேவ தயவால், அவருடைய மாறாத கிருபையால் அதே முயற்சிகளோடு, உலகத்திற்கே ஆசீர்வாதமாக இருக்க முடியுமல்லவா?
‘நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்து வைத்திருக்கிற தேவன்(நீதிமொழிகள்2:7) நிச்சயமாகவே ஞானத்தை நமக்கு தந்து, ஆசீர்வதிப்பாரல்லவா? கர்த்தர் மேல் விசுவாசம் உள்ளவர்களாக அதோடு கூட நாம் விடா முயற்சியும், உண்மையும், நேர்மையும், கடின உழைப்பும் உடையவர்களாயிருப்போமானால், தேவ கிருபையோடு இணைந்து உலகத்தை கலக்குகிறவர்களாக மாற முடியும்! ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான். ஆமென் அல்லேலூயா!
சவால்கள் சந்தித்திட 
உலகத்தில் ஜெயம் எடுக்க
உறவுகள் சீர் பொருந்த 
சமாதானம் நான் பெற்றிட
புதுக்கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, ஜாக்கிரதையுள்ளவனுடைய கரங்கள் ஆளுகை செய்யும் என்ற வசனத்தின்படி நாங்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கும்படியும், கடின உழைப்பும், உண்மையும் நேர்மையும் உள்ளவர்களாக உலகத்தை கலக்குகிறவர்களாக எங்களை மாற்றும். உமக்கென்று உத்தம சாட்சிகளாக வைத்து ஆசீர்வதித்தருளும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்;தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

Comments