சொந்த குடும்பத்தை நடத்துதல்

தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? – (1 தீமோத்தேயு 3:4-5).

சமீபத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி, ஒரு கிறிஸ்தவ பள்ளியில் புதிதாக பிள்ளைகளை சேர்த்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி ஒருத்தியும் சேர்க்கப்பட்டாள். அவளிடம் தலைமை ஆசிரியை கேள்விகள் கேட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அவளிடம் உன் தகப்பனார் பெயர் என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவள் பதில் சொல்ல மறுத்து விட்டாள். திரும்ப திரும்ப கேட்டபோது அந்த சிறுமி சொல்ல மறுத்து விட்டாள். அந்த தலைமை ஆசிரியைக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘ஏன் சொல்ல மறுக்கிறாய்?’ என்று கேட்டபோது, ‘நான் என் தகப்பனாரை பார்த்ததே இல்லை’ என்று கூறினாள். அந்த பிள்ளையின் தகப்பன் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் மிகவும் பெரியவர் என்று பெயரெடுத்தவர். அதனால் மிகவும் ஆச்சரியப்பட்ட ஆசிரியை அந்த தகப்பனாரை கூப்பிட்டு, உடனே பள்ளிக்கு வர சொன்னார்கள்.
அந்த தகப்பன், ‘என் பிள்ளைக்கு நேரம் செலவிட எனக்கு முடியாது. நான் ஆலயத்தில் இந்த வேளை மிகவும் பிஸியாக இருக்கிறேன். என்னால் வர முடியாது, நீங்களே அவளுக்கு ஒரு இடம் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். மீண்டும் அந்த தகப்பனை போனில் அழைத்த ஆசிரியை, அவர் வராவிட்டால், பிள்ளைக்கு பள்ளியில் இடம் கொடுக்க முடியாது என்று சொல்லவே, முணுமுணுத்தபடி பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.
ஆசிரியை பிள்ளையிடம், இதுதானே உன் அப்பா என்று கேட்டபோது, அந்த பிள்ளை எனக்கு தெரியாது என்று அவர் முன்பாகவே சொல்ல, அவர் அதிர்ந்து போனார். ஆசிரியை அவரிடம் கேட்டபோது, ‘நான் மிகவும் பிஸியானவன். எனக்கு குடும்பத்திற்கு என்று செலவழிக்க நேரம் கிடையாது. அவர்கள் அம்மா இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் பார்த்து கொள்வார்கள்’ என்று கூறினார். அப்போது அந்த ஆசிரியை, ‘முதலாவது உமது குடும்பத்தை சரிசெய்யும். உம் பிள்ளை தன் தகப்பன் யாரென்று அறியட்டும், பின் மற்றவர்கள் நீர் ஆலயத்திற்கென்று செய்கிற காரியங்களை அறியட்டும், இப்படிப்பட்டவர்கள் செய்யும் ஊழியங்களை கர்த்தர் வெறுக்கிறார்’ என்று எச்சரித்து அனுப்பினார்கள்.
அநேக ஊழியர்களின் குடும்பங்களில் மேலே கண்ட நிகழ்ச்சியை போன்றுதான் நடைபெற்று கொண்டிருக்கின்றது. தன் தகப்பன் யாரென்றே தெரியாத அந்த பிள்ளையை போல தங்கள் குடும்பத்தோடு தங்கள் நேரத்தை செலவழிக்காமல், ஊழியம் ஊழியம் என்று சென்று கொண்டிருக்கும் அநேக ஊழியர்கள் உண்டு. ‘ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?’ என்று வேதம் கேட்கிறது. ஊழியம் செய்கிறவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தை முதலாவது நடத்தவும், அன்பு செலுத்தவும் அறிந்திருக்க வேண்டும். முதலாவது குடும்பம், பின்தான் ஊழியம் என்று செய்ய வேண்டும்.
அதற்காக கர்த்தரை பின்னாக தள்ளி விடுவது அல்ல, கர்த்தரை முதலாவதாகவும், குடும்பத்தை இரண்டாவதாகவும், ஊழியம் போன்ற மற்ற காரியங்கள் மூன்றாவதாகவும் இருக்க வேண்டும். இந்த முறையை தலைகீழாக மாற்ற கூடாது. மாறும்போது குடும்பங்களில் தேவையற்ற பிரச்சனைகளும், போராட்டங்களும் நேரிடலாம்.
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று குடும்பமாக தேவன் தாமே இணைத்தார். கர்த்தர் இணைத்த அந்த குடும்ப வாழ்க்கையை நாம் செய்யும் ஊழியத்தினிமித்தம் பிரிந்து போக செய்யகூடாது. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்கி செய்யும்போது, குடும்பமாக அவர்கள் ஊழியத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். அந்த ஊழியம் தழைத்தோங்கும். தன் சொந்த குடும்பத்தை நடத்த அறிந்தவன், தேவனுடைய சபையையும் நன்கு நடத்துவான். ஆமென் அல்லேலூயா!
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மனிதனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கி, குடும்பமாக வைத்த தேவனே உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் இணைத்த குடும்பத்தை நன்கு நடத்த தெரிந்தவர்களாக ஒவ்வொரு ஊழியக்காரருக்கும் கிருபை செய்யும். குடும்பத்திற்கு ஏற்ற நேரத்தை ஒதுக்காமல், ஊழியம் என்று சென்று, அதினால் குடும்ப வாழ்க்கை பாதிக்காதபடி குடும்பத்திற்கு ஏற்ற நேரத்தை ஒதுக்கி ஊழியம் செய்ய கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

Comments