Saturday 1 October 2016

எக்காள சத்தம்

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். – (1கொரிந்தியர் 15:52-54).

பஞ்சு ஆலையில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு பகல் வேலையும், இரவு வேலையும் மாறி மாறி வரும். ஓவ்வொரு முறை வேலை ஆரம்பிக்கும்போதும் அந்த ஆலையிலுள்ள சங்கு முழங்கும். சில வேளைகளில் அவர், மனைவி பிள்ளைகளோடு அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பார். இரவு நேர வேலைக்காக இரவு 12 மணிக்கு சங்கு ஊதும் சத்தம் கேட்டு, எழுந்திருந்து முகத்தை கழுவிவிட்டு வேலைக்கு செல்வார். அந்த வீட்டில் தூங்கும் பலர் அந்த சத்தத்ததை பொருட்படுத்துவதில்லை. அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே அந்த சத்தத்தை கேட்டு எழும்புவார்கள். மனைவி வேகமாக, காப்பி போட்டு கொடுக்க அவர் தன் வேலைக்கு செல்லுவார். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.
பாருங்கள், அவருக்கு மட்டும் அந்த சங்கின் சத்தம் கேட்கிறது. காரணம் அவருடைய உள்ளத்தை ஆயத்தப்படுத்தி வைத்திருந்த படியினால்தான். வேலைக்கு செல்ல வேண்டுமென்ற கடமை உணர்வு இருக்கிறபடியால் அவரால் எழுந்து விட முடிகிறது. மற்றவர்கள் அதை பொருட்படுத்தாததினால் சங்கு சத்தம் அவர்கள் காதில் விழுவதும் இல்லை, எழுந்தரிப்பதும் இல்லை.
இதோ போலதான் அநேக பரிசுத்தவான்கள் இரவிலே படுக்க போகுமுன், ‘ஆவியானவரே என்னை நான்கு மணிக்கே எழுப்பும்’ என்று சொல்லிவிட்டு படுக்கைக்கு செல்கிறார்கள். எப்போது நான்கு மணியாகும்? என் நேசருடைய முகத்தை காண்பேன், மனம் திறந்து அவரிடம் பேசி உறவு கொள்வேன் என்ற ஆவலில் சரியாக நான்கு மணிக்கே எழும்பி விடுவார்கள். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.
இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளில் கூட இதே காரியம்தான் சம்பவிக்க போகிறது. யாரெல்லாம் அவருடைய வருகையிலே காணப்பட வேண்டும் என்கிற ஏக்கத்தோடும் வாஞ்சையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அந்த எக்காள சத்தத்தை கேட்ட உடன் அறிந்து கொள்வார்கள் இயேசுவின் வருகை வந்துவிட்டது என்று. இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு மத்திய ஆகாயத்திற்கு பறந்து செல்வார்கள். மற்றவர்களுக்கு அந்த சத்தம் கேட்பதும் இல்லை, அவர்கள் எதிர்கொண்டு போவதும் இல்லை.
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் என(1தெசலோனிக்கேயர் 4: 16-17) ல் பார்க்கிறோம். அப்போது அழிவுள்ள இந்த சரீரம் அழியாமையை தரித்துக் கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்படும் அல்லேலூயா! அந்த பொன்னான நாளில் நாம் மறுரூபமாக்கப்படும்படி, இப்போதே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாய் நம்மை காத்துக்கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்! ஆமென்!
பிரியமானவர்களே, நமக்கு எந்த ஒரு காரியத்தில் வாஞ்சையும் தாகமும் அதிகமாக இருக்கிறதோ, அது சம்பந்தமான விஷயங்களை கேட்க நம் இருதயம் எப்போதும் விழித்தே இருக்கும். அது போல தேவன் மேல் வாஞ்சையும் தாகமும் இருக்குமானால் அவருடைய வசனத்தை கேட்க, அவருடன் உறவு கொள்ள நம் இருதயம் ஏங்கும், எப்போது அவர் வந்தாலும் அவரை சந்திக்க ஆயத்தமாயிருக்கும். ஆயத்தமாவோமா! ஆமென் அல்லேலூயா!
எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம் 
இயேசு வருகின்றார்
ஒரு நொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்
ஜெபம் : எங்கள் கன்மலையும் மீட்பருமாகிய கர்த்தாவே உம்மை துதிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வருகை எப்போது நடந்தாலும் நாங்கள் அவருக்கு எதிர்கொண்டுவரும்படியாக எங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள கிருபை செய்யும். எக்காள சத்தம் தொனிக்கையில் நாங்கள் மறுரூபமாகக்கப்பட்டு, கர்த்தருடனே கூட என்றென்றும் இருக்கும்படியாக, அந்த சத்தத்தை கேட்கும் காதுகளையும், விழிப்புணர்வுடன் எங்களை ஆயத்தபடுத்தவும் உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

No comments:

Post a Comment