எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவர். – (சங்கீதம் 113:7).
சீனா தேசத்தை சேர்ந்த ஷவ் குன்பி என்னும் பெண் ஐந்து வயதாக இருக்கும்பொழுது அவளுடைய அம்மா மரித்து விட்டார்கள். அப்பாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தொழிற்சாலையில் வேலை செய்யும்போது நடந்த விபத்தில் அப்பாவின் பார்வை பாதிக்கப்பட்டது. அதுவரை நன்றாக படித்து கொண்டிருந்த ஷவ் என்னும் அந்த பெண் படிப்பை நிறுத்திவிட்டு இளம் வாலிப்பிராயத்திலேயே ஒரு கைகடிகாரம் செய்யும் தொழில் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
அங்கே அவளுக்கு கைக்கடிகாரத்தின் மேலுள்ள கண்ணாடி மூடியை சரிசெய்யும் வேலை கொடுக்கப்பட்டது. மூன்று மாதங்கள் அந்த வேலையை செய்தபோது அதில் வெறுப்பு ஏற்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தாள்.
கிராமத்து பெண் எழுதிய அந்த ராஜினாமா கடிதத்தை கண்ட அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆச்சரியப்பட்டு போனார். அந்த கடிதம் அவ்வளவு நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது. எனவே அவளுக்கு உடனே பதவி உயர்வு கொடுத்து அந்த நிறுவனத்திலேயே வேலைக்கு வைத்து கொண்டார்.
அவள் படிப்படியாக உயர்ந்து தனது 21 ஆவது வயதில் அந்த நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிய ஆரம்பித்தாள். தனக்கு கிடைத்த பணத்தை சேமித்து வைத்து தன்னுடைய அப்பாவிற்கு அனுப்பி வைத்தாள்.
அவளுடைய 22 ஆவது வயதில் தான் சேமித்து வைத்திருந்த சொற்ப பணத்தை வைத்து வாடகை கட்டடம் ஒன்றில் தனது சொந்த தொழிற்சாலையை நிறுவினார். இப்போது அந்த தொழிற்சாலையில் கைத்தொலைபேசி மற்றும் கம்பியூட்டர் ஆகியவற்றில் பயன்படுத்தும் கீறல் விழாத தொடுதிரை தாயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் சாம்சங் போன்ற கைத்தொலைபேசி நிறுவனங்களும், வேறு சில நிறுவனங்களும் கண்ணாடி தொடுதிரைகளை அவரது நிறுவனத்தில்தான் வாங்குகின்றனர்.
2015 மார்ச் மாத நிலவரப்படி, அவர்தான் சீனாவிலேயே பணக்காரப்பெண் என்று சொல்லப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு தற்போது 700 கோடி டாலர்! தான் சிறுவயதில் பாடங்களை படிக்க, கவனிக்க ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த ஆசிரியையை தன் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக மாற்றினார்.
எளிமையான நிலையிலிருந்து மிகப்பெரிய நிலைமைக்கு வந்திருக்கும் இந்த பெண்ணிடம் நீங்கள் வெற்றி அடைந்ததற்கு காரணம் என்ன என்று கேட்டால், அவள் ஒரு வேளை சொல்லுவாள், என்னுடைய உழைப்பும், ஞானமும் என்று.
ஆனால் அதையே ஒரு நல்ல கிறிஸ்தவரிடம் கேட்டால், அவர் சொல்லுவார், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிற என் தேவன் என்னை உயர்த்தினார் என்று. அல்லேலூயா! ஆம் நம் தேவன் நம்முடைய தாழ்மையில் நம்மை நினைக்கிறவர், நினைப்பதோடு அல்லாமல், குப்பையிலிருந்து உயர்த்தி, பிரபுக்களோடும், இராஜாக்களோடும் அமர செய்கிறவர். அல்லேலூயா!
அநேகருடைய வாழ்க்கையில் கேட்டால் சொல்லுவார்கள், நான் தாழ்மையில் இருந்தேன், நான் இந்த நிலைமைக்கு வருவேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை, ஆனால் கர்த்தர் என்னை உயர்த்தினார் என்று சொல்லுவார்கள். பூமியின் கடையாந்திரத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னையும் கர்த்தர் நோக்கி பார்த்து, உயர்த்தி வைத்தார் என்றால் அவரை அண்டி கொள்ளுகிற ஒருவரையும் அவருடைய கரம் உயர்த்தாமல் விடாது.
நாம் உயர்த்தப்படும்போது ஒரு நாளும் நம்முடைய பழைய நிலைமையை மறந்து விடக்கூடாது. மறந்து விட்டால் நன்றி மறந்து போவோம். தேவனிடம் நன்றி மறவா நல்ல இருதயத்தை தாரும் என்று ஜெபிக்க வேண்டும். அவர் செய்த நன்மைகளை நினைத்து தினந்தோறும் அவரை நன்றியோடு துதிக்க வேண்டும். அவரை துதிக்கும் துதி எப்போதும் நம் நாவில் இருக்க வேண்டும். ஆமென் அல்லேலூயா!
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
கரம்பற்றி நடத்துகின்றீர்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
கரம்பற்றி நடத்துகின்றீர்
நன்றி உமக்கு நன்றி
நன்றி உமக்கு நன்றி
நன்றி உமக்கு நன்றி
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
அருமை இரட்சகரே ஆவியானவரே
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எளியவர்களாகிய எங்களையே எப்போதும் நினைக்கிறவரே, எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி, உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கிற நல்லவரே உம்மை துதிக்கிறோம். நீர் செய்த நன்மைகளை ஒருபோதும் மறவாமல் உமக்கு எந்நாளும் துதி செலுத்துகிறவர்களாக எங்களை வைத்தருளும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
Comments
Post a Comment