Saturday 1 October 2016

பரிசுத்தமாகுதலை பூரணப்படுத்துவோம்

பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.                   –  (2 கொரிந்தியர் 7:1).

ஆகாய மண்டலத்தில் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் மட்டுமல்லாது வேறு பல வாயுக்களும் உள்ளன. அதை காற்று மண்டலம் என்றும் அழைக்கின்றனர். அதில் 78 சதவிகிதம் நைட்ரஜன் என்ற வாயு உள்ளது. ஆக்ஸிஜன் 20 சதவிகிதமும் கார்பன்டை ஆக்ஸைடு 0.03 சதவிகிதமும் வேறு சில வாயுக்களும் குறைந்த அளவில் உள்ளன. பூமியிலிருந்து 36,000 அடி தூரம் வரை காற்றுமண்டலம் ஓரளவு அடர்த்தியாக காணப்படும் அதற்கு உயரே செல்ல செல்ல வாயுக்கள் குறைந்து சுவாசிப்பதற்கும் கடினமாக இருக்கும்.
அப்படியே உயரஉயர சென்று கொண்டேயிருந்தால் சில நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் காற்றில்லாத வெளிமண்டலம் வந்துவிடும்.
நம்முடைய உடலுக்கு இன்றியமையாத தேவை ஆக்ஸிஜன் ஆகும். ஒவ்வொரு முறை மூச்சு எடுககும்போதும் இந்த உயிர்காக்கும் வாயு நுரையீரலில் சென்று இரத்த நாளங்களின் மூலம் உடல் முழுவதும் எடுத்து செல்லப்படுகிறது. எனவே மூச்சுவிடுதல் என்பது உடலில் மிக முக்கியமான வேலைகளில் ஒன்று.
நன்றாக ஆழமான மூச்சுவிடுதல் என்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். சுத்தமாக காற்றை சுவாசிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.
ஆனால் காற்று மண்டலம் பல வழிகளில் மாசுப்பட்டிருப்பதால் பலவிதமான நோங்களும் சிலவேளைகளில் மரணமும் ஏற்படுகிறது. விளை நிலங்களும் இதர உயிரினங்களும் கூட மாசுப்பட்ட ஆகாய மண்டலத்தினால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. குப்பைகளை எரிப்பதினால் உண்டாகும் புகையினாலும், இயற்கையாகவே உண்டாகும் தூசுகளினாலும,; எரிமலைகளினாலும், வேறுபல காரணங்களாலும் காற்று மண்டலம் அசுத்தமடைகிறது.
கிராமங்களை காட்டிலும் நகரங்களில் மாசு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதனால் நகரங்களில் வசிப்பவர்கள் லட்சக்கணக்கானோர் நுரையீரல், மூச்சுக்குழாய் சம்பந்தமான வியாதிகளினால் அவதிப்படுகின்றனர். எனவே நம்மால் முடிந்த அளவு காற்றில் மாசு ஏற்படுவதை தவிர்ப்பபோம். நல்ல காற்றோட்டமான இடத்தில் வசிக்க முயற்சி செய்வோம்.
ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ பரிசுத்தமான நல்ல ஆவிக்குரிய மண்டலம் குடும்பங்களிலும், சபைகளிலும் நிலவ வேண்டும். இந்த நல்ல ஆவிக்குரிய சூழ்நிலைகள் இல்லாவிடில், ஆவிக்குரிய மரணமும் ஏற்படலாம். ஆவிக்குரிய மண்டலத்தில் மாசு ஏற்படுத்தும் எந்தவித செயலிலும் பேச்சிலும் நாம் ஈடுபடக்கூடாது. உடன் விசுவாசிகளும் குடும்ப அங்கத்தினர்களும் ஆவிக்குரிய வாழ்வில் ஆரோக்கியமாக திகழ ஆவிக்குரிய மண்டலத்தை மாசுபடுத்தும் செயல்களை எவ்விதம் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ந்து அதன்படி செய்ய வேண்டும்.
மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் என்ற வார்த்தையின்படி எல்லா அசுத்தங்களையும் நம்மை விட்டு அகற்றி, பரிசுத்தமாக ஜீவிப்போமாக! கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! ஆமென் அல்லேலூயா!
பரிசுத்தமான பரமனே என்னை
பாத்திரன் ஆக்கிடுமே
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாக்கிடுமே
கர்த்தருக்கு பரிசுத்தம் 
கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும்
பரமனே சுத்தமாக்கும்
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மகா பரிசுத்தமுள்ளவரே, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவரே, உம்மை தரிசிக்கும்படி நாங்கள் பாவம் இல்லாமல் வாழ எங்களுக்கு கிருபை தாரும். கர்த்தருக்கு பரிசுத்தம் என்று எங்கள் நெற்றியில் எழுதியிருக்கும்படி பரிசுத்தமாய் வாழ கற்று தாரும். ஏங்களை நெருங்கி வரும் எல்லா பாவங்களையும், அசுத்தங்களையும் தூர தள்ளிவிட்டு, கர்த்தருக்கென்று பரிசுத்தமாய் வாழ கிருபை செய்தருளும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment