கரிசனையுள்ள இருதயம்

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி –  (நெகேமியா 1:4).

வேதத்தில் உள்ள சில பிரபலமானவர்களை குறித்து கேட்டால் யாருடைய பெயர் உங்களுக்கு ஞாபகம் வரும்? ஒருவேளை தாவீது என்று சொல்லலாம், அப்போஸ்தலனாகிய பவுல் என்று சொல்லலாம், ஆனால் நெகேமியா என்று யாராவது நினைத்திருப்போமா?
நெகேமியாவை ஜெப வீரர் என்றும், மனந்தளராத உறுதியான தலைவர் என்றும், தைரியசாலி என்றும் அழைக்கலாம். நெகேமியாவின் புத்தகத்தை வாசித்த பின்னர் நீங்களும் அவருக்கு சில புனை பெயரை கொடுப்பீர்கள்.
எருசலேம் நகரம் பாழடைந்து, சிதைந்து சின்னாபின்னமாக கிடந்தது. அது யுத்தத்தின் விளைவினால் ஏற்பட்ட அழிவாக இருந்தாலும், இஸ்ரவேலர் தேவனுடைய பல எச்சரிப்புகளையும், ஆலோசனைகளையும் மீறி அவர்கள் செய்த பாவத்தினால் ஏற்பட்ட விளைவாகும். இன்று அநேகருடைய வாழ்க்கை சீரழிந்து போவதற்கு காரணமும் இதுவே. எச்சரிப்புகளையும:, நல் ஆலோசனைகளையும் உதாசீனப்படுத்தும்போது நமக்கு நாமே அழிவை தேடி கொள்கிறோம்.
நெகேமியாவின் புத்தகத்தை வாசிக்கும் நமக்கு கிடைக்கும் சந்தோஷமான செய்தி என்னவென்றால் கடந்த கால வாழ்க்கையின் சீரழிவுகள் எதுவாக இருந்தாலும், கர்த்தர் நம்மோடிருக்கும்போது, எல்லாம் சீர்பட்டு விடும் என்பதே ஆகும்.
நெகேமியா இடிந்து தகர்ந்து கிடந்த அலங்கத்தை மறுபடியும் எடுப்பித்து கட்டியது போல இடிந்த தகர்ந்த நம் ஆவிக்குரிய வாழ்க்கையையும் கர்த்தரின் தயவுள்ள கரத்தினால் எடுப்பித்து கட்ட முடியும்.
நெகேமியாவிற்கு வெளிநாட்டில் ராஜாவின் அரமனையில் வேலை. இராஜ உணவும், வசதிகளும், சொகுசுகளும் அவருக்கு இருந்தும் எதுவும் அவரை கவரவில்லை. யூதாவிலிருந்து திரும்பி வந்தவர்களிடம் எருசலேமைக் குறித்தும், அங்கு மீந்திருந்தவர்களின் செய்தியையும் அக்கறையுடன் விசாரித்தார். தேசத்தின் மக்கள் மகா தீங்கை அனுபவிக்கிறதையும், எருசலேம் பாழாய் கிடக்கிறதையும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் நெகேமியா முதலாவது அழ ஆரம்பித்தார். பின்னர் உபவாசித்து பரலோகத்தின் தேவனை நோக்கி மன்றாடி ஜெபித்தார்.
முதலாவது நமது சொந்த ஆவிக்குரிய வாழ்க்கை எந்த நிலைமையிலு;ளளது என்றும், பின்னர் சீரழித்து கிடக்கும் மற்றவர்களது வாழ்க்கையை குறித்து ஒரு கரிசனை, அக்கறை காட்டுவதுதான் சீரழிந்த வாழ்க்கையை மறுபடியும் சீரடைய செய்ய நாம் எடுக்கும் முதல் அடியாகும்.
இந்த கரிசனையும் அக்கறையும் முதலாவது ஏற்படாமல், சீரழிந்து போன எவருடைய வாழ்க்கையையும் நாம் எடுப்பித்து கட்ட முடியாது. கர்த்தராகிய ஆண்டவர் நெகேமியா போன்ற கரிசனையும் அக்கறையுமுள்ள மனிதர்களை தேடி கொண்டிருக்கிறார். தேவனுடைய வல்லமையினால் நாமும் சீரழிந்து போன அநேகருடைய வாழ்க்கையை எடுப்பித்து கட்டும் கரிசனையுள்ளவர்களாக முடியும்.
அப்படிப்பட்ட கரிசனையும், அக்கறையும், அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காக நம் ஒவ்வொருவரின் இருதயத்திலும் வரட்டும். அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாறட்டும். அப்படி ஜெபிக்கிற, மற்றவர்களை குறித்து அழுகிற, அக்கறை காட்டுகிற அநேக நெகேமியாக்கள் நம் தேசத்தில், தமிழகத்தில் உருவாகட்டும். ஆமென் அல்லேலூயா!
திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்;;
கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்
தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்கிற நெகேமியாவை போன்றவர்களை அதிகமாய் எழுப்புவீராக. நாங்கள் ஒவ்வொருவரும் அப்படிப்பட்டவர்களாக, மற்றவர்கள் மேல் கரிசனை உள்ளவர்களாக, அக்கறை உள்ளவர்களாக இருக்கும்படியான இருதயத்தை தருவீராக. இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் தகப்பனே ஆமென்.

Comments