தேவையற்ற பாரம்பரியங்கள்

உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். –  (மத்தேயு 15:6).

நிக்கலோஸ் 11 என்பவர் 1894 – 1917 வரை ரஷ்ய பேரரசை ஆண்டு வந்தார். ஒரு நாள் அவரது அரண்மளை தோட்டத்தில் உலாவி கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர்வீரன் ஒருவன் அசையாமல் நின்று கொண்டிருந்தான். மன்னர் அவனை பார்த்து ‘நீ எதை காவல் காத்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார். ஏனென்றால் அவன் நின்ற இடத்தில் பாதுகாப்பதெற்கென்று ஒன்றுமில்லை. அவன் ‘எனக்கு ஒன்றும் தெரியாது மன்னரே, காவலர்களின் தலைவன் இந்த இடத்தில் நிற்கும்படி சொன்னார். எனவே இங்கு நின்று கொண்டிருக்கிறேன்’ என்றான்.
உடனே மன்னர் அந்த தலைவனை அழைத்து விசாரித்தார். அவனும் மன்னரை வணங்கி, ‘மன்னரே இந்த இடத்தில் எப்பொழுதும் ஒரு காவலாளியை நிறுத்த வேண்மென்று எழுத்து பூர்வமான கட்டளை உள்ளது. எனக்கும் எதற்கென்று தெரியாது. பல ஆண்டகளாக அதை பின்பற்றி வருகிறோம்’ என்று கூறினான். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. இது குறித்து ஆராயும்படியாக கூறினார். அரண்மனை கருவூலத்தில் இருந்த ஏடுகளை புரட்டி பாhத்தனர். அப்பொழுது விடை கிடைத்தது. 1762 ஆம் ஆண்டு ரஷ்ய சாம்ராஜ்யத்தை அரசாண்ட கேத்தரின் தி கிரேட் என்ற மகாராணி அந்த இடத்தில் ஒரு விசேஷ ரோஜா செடி ஒன்றை நட்டு வைத்தார். அதை எவரும் தொடாதபடியும், அழித்து விடாதபடியும் ஒரு காவலாளி எப்பொழுதும் அதனருகில் நிறுத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
130 வருடங்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் அந்த ரோஜா செடி அழிந்து விட்டது. ஆனால் நாளடைவில் அது என்னவென்று தெரியாமலேயே ஒன்றுமில்லாத இடத்தை சட்டபடி காவலாளிகள் காவல் காத்து கொண்டிருந்தனர்.
சமுதாயத்திலும் சபையிலும் ஏராளமான பாரம்பரியங்கள் மற்றும் சடங்காச்சாரங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. எதற்காக இந்த பாரம்பரியத்தை பின்பற்றகிறீர்கள் என்று அநேகரிடம் கேட்டால், முன்னோர்கள் செய்து வந்தார்கள், அதனால் நாங்களும் செய்கிறோம் என்று கூறுவார்கள். ஏன் எதற்கு என்று தெரியாது.
சில பாரம்பரியங்களும், நடைமுறைகளும் சபைகளில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக உள்ளன. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம் என்று கூறுவார்கள். ‘நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள்’ (மாற்கு 7:13) என்று இயேசுகிறிஸ்து சொன்னார்.
கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராக உள்ள பாரம்பரியங்களை நாம் சிந்தித்து, இதை நாம் ஏன் செய்கிறோம் என்று ஆராய்ந்து, தேவையில்லாத ஒன்றென்றால் நாம் ஏன் அதை விட்டு விடக்கூடாது? கர்த்தருடைய வார்த்தையை விட நாம் பாரம்பரியங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
நம்முடைய பாரம்பரியங்களினால் தேவனை துக்கப்படுத்தாதபடி கர்த்தருக்கு பிரியமானதை செய்வோம். அவரையே மகிமைப்படுத்துவோம். பாரம்பரிய கட்டுகளை அறுத்தெறிவோம். ஆமென் அல்லேலூயா!
விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுத்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் – ஆ…. ஆ
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே எங்கள் பாரம்பரியங்களினாலே தேவனுடைய வார்த்தைகளை நாங்கள் அவமாக்காதபடி அவற்றை களைந்துவிட ஞானத்தை தாரும். தேவையற்ற பாரம்பரியங்களை பற்றி கொண்டிருக்காதபடி அவற்றை விட்டுவிட கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

Comments