வியாதி படுக்கையை மாற்றுபவர்

பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார். – (மாற்கு 1:34).

உலகில் ஆயிரக்கணக்கான வியாதிகள் உள்ளன. இந்த வியாதி மட்டும் நம்முடைய எதிரிகளுக்கும் வரப்கூடாது என்று நாம் சொல்ல கேட்டிருக்கிறோம். தாங்கள் பட்ட கஷ்டத்தின் அகோர தன்மையை சொல்வதற்காக அப்படி சொல்வார்கள். அவர்களுக்கு வந்திருக்கிற வியாதிகளை பார்க்கும்போது நமக்கிருக்கும் வியாதி ஒன்றுமில்லை என்று சிலர் சொல்லவும் கேட்டிருக்கிறோம்.
உலகில் வியாதி என்பது எவரையும் விட்டு வைப்பதில்லை. யாருக்காவது விநோதமான வியாதியோ அல்லது குறைபாடோ இருப்பதை பார்த்தோமானால் அதை பார்த்து நாம் அமைதியாக நின்றிருக்கிறோமல்லவா? பரிதாபத்தையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தும் சிலரது வியாதிகள். உடல் குறைபாடுகள் ஏன் இப்படியெல்லாம் அவர்களது வாழ்க்கையில் நடக்கிறது என்று நமக்குள்ளே கேள்விகள் எழுப்புவதை நம்மால் தடுக்க முடியாது.
நியூஜெர்சி என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணிற்கு அவளது இருபத்தேழாவது வயதில் ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு பிறகு அவளுடைய இடது கை மற்றும் இடது கால் ஏதோ அதற்கென்று தனி மூளை இருப்பது போன்று செயல்பட ஆரம்பித்தது. நடந்து கொண்டிருக்கும் சமயம் கைப்கைக்குள் இடது கை தானாக கையை விட்டு பொருட்களை எடுத்து கீழே போட்டுவிடும். அது தெரியாமலேயே அவள் சென்று விடுவாள். அப்படி அநேக பொருட்களை அவள் இழந்துள்ளாள்.
தீடிரென்று அவளுடைய இடது கை அவளையே அடித்து விடும். சட்டை பொத்தானை கழற்றும். இப்படி ஏறுக்குமாறான ஏதாவது ஒன்றை இடது கை செய்யும். அவளது எண்ணத்திற்கும் மூளையின் கட்டுப்பாட்டிற்கும் எதிராக இஷ்டம் போல செயல்படும்.
மருத்துவர்கள் அது என்ன என்று சோதித்தபோது அவளுக்கு மூளைப்பகுதியில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் பக்க விளைவுதான் இந்த குறைபாடுகளுக்கு காரணம் என்று கண்டுபிடித்தனர். இதற்கான சில மருந்துகளை கொடுத்த போதிலும் அந்த வியாதியை முழுவதும் சுகப்படுத்த முடியவில்லை. இதுபோன்று இன்னும் அநேக விநோதமான வியாதிகள் உள்ளன.
பூரணமான ஆரோக்கிய சூழ்நிலையில் உருவாக்கப்பட்ட இந்த பூமி, பாவத்திற்க்கு பின்னர் வியாதியினால் தாக்கப்பட ஆரம்பித்தது. வியாதிகளை சுகப்படுத்த எத்தனையோ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டப்பின்னும் மருத்துவமனைகள் பல வந்த பின்னரும், வியாதிக்கும், அதனால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை.
தற்போது இருக்கும் நிலையை பார்த்தால் ஹோட்டல்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் பஞ்சமேயில்லை. மனிதர்கள் பெருக பெருக வியாதிகளும் பெருகி கொண்டே இருக்கின்றன. வியாதிகளுக்கு மருந்துகளை கண்டுபிடிக்க, கண்டுபிடிக்க, புதிய புதிய வியாதிகள் உருவெடுத்து கொண்டே இருக்கின்றன. சிலவற்றை குணப்படுத்தலாம், சிலவற்றை குணப்படுத்தவே முடியாத நிலையும் உண்டு.
ஆனால் அற்புதமாக ஜெபத்தினால் குணமடைந்த வியாதிகள் பல உண்டு. பலர் சாட்சிகளை சொல்லியும் நாம் கேட்டிருக்கிறோம். ‘படுக்கையின் மேல் வியாதியாய் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார். அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றி போடுவீர்’ (சங்கீதம் 41:3) என்று வசனம் கூறுகிறது. கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவரால் சுகமாக்க முடியாத வியாதி ஒன்றும் இல்லை. விசுவாசத்தோடு நாம் அவரிடம் கேட்கும்போது அவர் நம்மை தொட்டு சுகமாக்குகிறார். அல்லேலூயா!
கர்த்தர் சிருஷ்டித்த இந்த அற்புத உலகம் பாவத்தின் கோரத்தினால் சாபமாக்கப்பட்டது. வியாதிகளும், வேதனைகளும் வந்தது. கர்த்தர் புதியதாக சிருஷ்டிக்கும் புதிய பூமி வியாதிகளற்றதாக, வேதனைகளற்றதாக, சாபமற்றதாக, பாவமற்றதாக இருக்கும். அப்படிப்பட்ட அற்புத பூமியில் வாழ்வதற்கு நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, அவருடைய கற்பனைகளின்படி பரிசுத்தமாக வாழும்போது நாமும் அந்த தேசத்தை சுதந்தரிக்க முடியும். நித்திய நித்தியமாக வியாதிகளின்றி, சுகமாய், ஆரோக்கியமாய் வாழ முடியும். ஆமென் அல்லேலூயா!
பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும்பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார்
இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றியுண்டு துதிப்பாடலுண்டு 
இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார்
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சபிக்கப்பட்ட இந்த உலகில் தீராத வியாதிகளினால் வாடுகின்ற ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் தகப்பனே. தொட்டு சுகப்படுத்துவீராக. வேதனைகளை மாற்றுவீராக. சுகமாயிருக்க கிருபை செய்வீராக. வரப்போகும் புதிய பூமியில் வியாதியில்லையே, வேதனையில்லையே அப்படிப்பட்ட இடத்தில் நாங்கள் வாழும்படி பரிசுத்தமாக ஜீவிக்க கிருபை செய்யும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் தகப்பனே ஆமென்.

Comments