Saturday 1 October 2016

தியாகமான வாழ்வு

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். – (வெளிப்படுத்துதல் 12:11).

1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அல்பேனியா என்ற நாட்டில் நாசிப்படையினரை எதிர்த்து போரிட்டு கொண்டிருந்த வீரர்களுக்கு தேவையான பொருட்களை விமானம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த ஏழு வீரர்கள் எடுத்து சென்றனர். அவர்களை தலைமை தாங்கி சென்றவர் சார்ஜன்ட் ஜான் தாமஸ் என்பவராவார். இது இரகசிய பயணம் என்பதால் அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் எவருக்கும் தெரியவில்லை.
அந்த விமானம் தாழ்வாக பறந்து சாமான்களை போட்டு கொண்டிருந்த சமயம் அல்பேனியாவின் தலைநகரத்திலிருந்து அறுபத்தைந்து மைல் தொலைவில் ஒரு மலையின் மேல் மோதி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. அதில் பயணித்த அனைவரும் மாண்டனர்.
விமானம் விழுந்த இடம் அடர்ந்த காடுகளால் சூழ்ந்த இடம் என்பதால் விபத்துக்குள்ளான விமானத்தையும் அதில் பயணித்த யாரையும் தேட முடியவில்லை.
இரண்டாம் உலக போர் முடிந்த பின்னர் ஜான் தாமஸ் மற்றும் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள தொலைந்து போனதாக அறிவிக்கப்பட்டது. அல்பேனியா நாடு கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் வந்தததால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அவர்களை தேட முடியாமல் போனது.
1990 ஆம் ஆண்டு அல்பேனியாவை சேர்ந்த ஜாகோ காலா என்பவர் அந்த காடுகளின் வழியாக தற்செயலாக சென்றபோது, சிதறிக்கிடந்த விமானத்தருகில் விரல் எலும்பு ஒன்று மோதிரத்துடன் கிடப்பதை கண்டார்
அதை தன் மகன் ஷெமில் காலா என்பவரிடம் கொடுத்து எப்படியாகிலும் இறந்தவரின் உறவினர்களிடம் சேர்க்குமாறு கூறினார்.
அவர் பல ஆண்டுகளாக உறவினர்களை தேடினார். முயற்சி பலனளிக்கவில்லை. 2013ஆம் ஆண்டு அல்பேனியாவிலுள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகத்தை அணுகினார். அந்நாடுகளை சேர்ந்த குழுவினர் விமானம் விழுந்து நொறுங்கின இடத்தை சென்று பார்வையிட்ட போது அது ஜான் தாமஸ் அவரின் மோதிரம் என்று உறுதிப்படுத்தினர். அந்த ஏழு வீரர்களின் உறவினர்களும் அல்பேனியாவுக்கு அழைக்கப்பட்டனர்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஜான் தாமஸின் 93 வயது நிரம்பிய சகோதரிக்கு அந்த மோதிரத்தை அந்நாட்டு இராணுவ மந்திரி அணிவித்தார். அப்பொழுது அவர் ‘எங்கள் நாடு விடுதலை பெற உஙகள் சகோதரன் செய்த தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது’ என்றார்.
பிரியமானவர்களே, எத்தனையோ ஆண்டுகளுக்கு பின்னும் ஒரு மனிதன் செய்த தியாகம் மறக்கப்படாமல் போற்றபட்டது. அவர் அந்த இடத்தில் மரித்து போவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் அவரும், ஏழு பேரும் செய்த தியாகம் ஏறக்குறைய 69 வருடங்களுக்குப்பின் நினைவுகூரப்பட்டது.
நாமும் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் நமக்காக தம் ஜீவனையே கொடுத்து, தமது கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி, நமக்கு இலவசமாக இரட்சிப்பை பெற்று கொடுத்த அன்பர் இயேசுகிறிஸ்துவின் தியாகத்தை நினைத்து பார்க்கிறோம்.
முறையாக நமக்கு சேர வேண்டிய தண்டனையை தம் மேல் ஏற்றுக் கொண்டு, கொடிய பாடுகள் பட்டு நமக்காக மரித்த அவரின் தியாகத்தை நாம் நினைவு கூராமல் இருப்பது எப்படி? லெந்து நாட்களில் மாத்திரமல்ல, ஒவ்வொரு நாளும் நாம் அந்த அன்பை நினைக்க வேண்டும். அவருக்காக வாழ வேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் நாட்களில் இருந்து, ஆதி அப்போஸ்தலரிலிருந்து எத்தனையோ பேர் அவருக்காக தங்கள் ஜீவனையும் பாராமல், உயிரையே கொடுத்தார்கள். எத்தனையோ பேர் அவருக்காக பாடுகளின் ஊடாக கடந்து சென்றிருக்கிறார்கள். தற்போது மத்திய கிழக்கு பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நாம் அறிந்திருக்கிறோம்.
அவர்கள் செய்த தியாகங்களும் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும் நாளில் அதற்குரிய பாராட்டையும், கிரீடத்தையும் நிச்சயமாக அந்த பரிசுத்தவான்களுக்கு அவர் தருவார் என்பதில் சந்தேகமே இல்லை.
நாம் நம் ஜீவனை தர வேண்டாம், ஆனால் கிறிஸ்துவுக்காக எதையாவது தியாகம் செய்திருக்கிறோமா? நம் தூக்கத்தை, நம் பெருமைகளை, நம் சம்பாத்தியத்தில் கொஞ்சத்தை எதை தியாகம் செய்திருக்கிறோம்? அவரிடமிருந்து எதையாவது பெற்று கொள்ள வேண்டும் என்றுதான் பார்க்கிறோமே ஒழிய எதையாவது தியாகம் செய்திருக்கிறோமா என்றால் நம்மில் அநேகர் குறைவுபட்டவர்களாகவே இருப்போம். நம்மையே ஆராய்ந்து பார்ப்போம்.
நாம் செய்யும் தியாகத்தை மற்றவர்கள் பாராட்டவில்லை என்றாலும், கர்த்தர் நிச்சயமாக கனப்படுத்துவார். நம்மை உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா!
என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு
என் வாழ்வில் செய்த நன்மை ஏராளமே
ஏராளம் ஏராளம் ஏராளமே
கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளமே
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி அப்பா
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தியாகத்தை நினைத்து பார்த்து துதிக்கிறோம். அவர் மூலமாய் எங்களுக்கு கிடைத்த இரட்சிப்பிற்காக நன்றி. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் பாடுகளை சகித்த ஒவ்வொருவருக்காகவும் நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்க்கையிலும் நாங்கள் தியாகமாய் கர்த்தருக்கென்று வாழ, காரியங்களை செய்ய எங்களுக்கு கற்றுதாரும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment