பெயர் சொல்லி அழைத்த தேவன்

அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை -(ஏசாயா 49:15).

இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் முகமது அவர்களுக்கு 2015ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகத்திலிருந்து அழைப்பு வந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவிற்கு வருகை தர இருந்தார். அதற்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில் அந்த போன் வந்தது.
அந்த போனில் இருந்தவர்கள் விஷால் என்ற பள்ளி மாணவனின் விலாசம் கிடைக்குமா? ஒபாமாவும் அவரது மனைவியும் அவனை காண விரும்புகிறார்கள் என்று தகவல் வந்தது. யார் இந்த விஷால்?
2010ம் ஆண்டு நலம்பர் மாதம் ஒபாமாவையும், அவரது மனைவியையும் டெல்லியிலுள்ள ஹுமாயூன் கல்லறையை பார்க்க அழைத்து சென்றார் அந்த இயக்குனர். டெல்லியை சுற்றியுள்ள நினைவு சின்னங்களை அச்சமயம் புதிப்பித்து கொண்டிருந்தனர். எனவே ஏராளமான கூலியாட்கள் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களது பிள்ளைகள் சுமார் நூற்று ஐம்பது பேருக்கு இயக்குனர் முகமது அவர்களும், சில பொது நல விரும்பிகளும் ஹிந்தி, ஆங்கிலம் கணக்கு போன்ற பாடங்களை அந்த இடத்தில் இருந்த தற்காலிக பள்ளியில் கற்று கொடுக்க ஒழுங்கு செய்திருந்தனர்.
அச்சமயத்தில் அங்கு வருகை தந்திருந்த ஒபாமாவும், அவரது மனைவியும் அந்த பிள்ளைகளை சந்தித்து பேசினர். அவர்களுள் ஒருவன்தான் விஷால்! அந்த பெயரை மறக்காமல் நினைவில் வைத்திருந்த ஒபாமா நான்கு ஆண்டுகளுக்குப்பின் இந்தியா வரும்போது அவனை சந்திக்க விரும்பினார். என்ன ஆச்சரியம்!
அவனது பெற்றோர் டெல்லியில் வேலை முடிந்தவுடன் வேறு இடம் சென்றுவிட்டனர். அவர்களை எப்படி தேடி கண்டுபிடிப்பது? ஆனாலும் கடைசியில் அவர்களை கண்டுபிடித்து இந்த செய்தியை கூறினபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். ஜனவரி 27ஆம் தேதி விஷால் மாத்திரமல்ல, அவனுடைய அப்பா அம்மா சகோதரி அனைவரும் ஒபாமாவையும், அவரது மனைவியையும் சந்தித்து பேசினர். என்ன ஒரு சிலாக்கியம்!
பிரியமானவர்களே, வானத்தையும் பூமியையும் படைத்த நம் சர்வ வல்லமையுள்ள தேவன் இந்த உலகத்தில் கோடி கோடி பேர்கள் இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரின் பெயர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். விசேஷமாக அவரை ஏற்று கொண்ட நம் ஒவ்வொருவரின் பெயரையும் தம் உள்ளங்கையில் வரைந்து வைத்துள்ளார். எத்தனை பெரிய பாக்கியம் அது!
‘உன்னை பெயர் அழைத்தேன் நீ என்னுடையவன்’ (ஏசாயா 43:1) என்று உரிமையோடு நம்மை அழைக்கும் வேறு தெய்வங்கள் உண்டா? நம்மை பெயர் சொல்லி அழைத்து நம்மை என்றும் மறவாத தேவன் இருக்கும்போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நம்மை அழைத்த தேவன் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. நம்மை நினைவு கூர்ந்து ஆசீர்வதிக்கிறவர்!
ஒரு நாட்டை ஆளும் ஜனாதிபதி ஒரு எளியவனின் பெயரை ஞாபகம் வைத்து மீண்டும் காண விரும்புவது விசேஷமான ஒன்றாக இருந்தாலும், நம்மை ஒரு போதும் மறவாமல், நம்மை ஆதரித்து, விசாரித்து, நம்மை பெயர் சொல்லி அழைப்பவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி அல்ல, அண்டசராசரங்களையும் படைத்த தேவன். அவர் நம் பட்சத்தில் இருக்கும்போது நமக்கு கிடைக்கிற மகாபெரிய சிலாக்கியம் வேறு யாருக்கு உண்டு? அப்படிப்பட்ட தேவனை தெய்வமாக கொண்டுள்ள நாம் அவரை மனதார துதிப்போமாக! ஆமென் அல்லேலூயா!
ஆதி தகப்பனான அந்த 
ஆபிரகாமை அழைத்தது நான்
கரம்பிடித்தவனை 
கடல் மணல் அளவாய் 
கர்த்தர் நான் நடத்தவில்லையா
என் சமுகம் உன் முன் செல்லும்
உன்னை ஒரு போதும் கைவிட மாட்டேன் 
அழைத்தது நான்தானே
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களை பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறவரே உமக்கு துதிகளை ஏறெடுக்கிறோம் ஐயா. எங்களை ஒருபோதும் கைவிடாத தேவன் உம்மை மறவாதபடி உமக்கென்று வாழ கிருபை தாரும். எங்களை அழைத்த தேவன் இறுதிவரை எங்களை வழிநடத்த வல்லவராக இருக்கிறபடியால் உம்மிடத்தில் எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

Comments