Saturday 1 October 2016

பாடுகளுக்குப்பின் பரலோகம்..

சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள். – (அப்போஸ்தலர் 14:22).

கனடா தேசத்தின் வடமேற்கு பகுதி அடர்ந்த காடுகள் மலைகள் ஆறுகள் நிறைந்த பகுதியாகும். அங்கே கிளாண்டைக் என்ற ஆற்றுப்படுக்கையில் 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த நான்கு பேர் அதிக அளவில் தங்கம் இருப்பதாக கண்டுபிடித்தனர்.
அதை கேட்டு அநேகர் கிளாண்டைக் பகுதிக்கு தங்கத்தை தேடி வந்தனர். அங்குள்ள ஒவ்வொரு கிளை படுக்கையிலும் கூட தங்கம் கிடைப்பதை கண்டறிந்தனர். கடும்பனி, குளிர் காலம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தங்கம் கிடைக்கும் இடம் நோக்கி விரைந்தனர்.
1897ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ, சியாட்டல் ஆகிய பட்டணங்களுக்கு வந்த கப்பல்களில் சந்தை மதிப்பில் சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கொண்டு வந்தனர். உடனே கிளாண்டைக் ஆற்றுப்படுகையில் தங்கம் கிடைக்கும் செய்தி பல இடங்களில் பரவியது. தங்க வேட்டை சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அநேகர் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு செய்த தொழில்களை விட்டுவிட்டு கிளாண்டைக் நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
1896 முதல் 1899 ஆம் ஆண்டு வரை சுமார் ஒரு இலட்சம் பேர் தங்கத்தை தேடி சென்றனர். அவர்களில் 40,000 பேர்தான் ஊர் திரும்பினர். அநேகர் மரித்து போனதற்கும், தோல்வியடைந்ததற்கும் அநேக காரணங்கள் உள்ளன. சரியான போக்குவரத்து வசதி கிடையாது. முதலாவது கப்பலிலும், பின்னர் குதிரை போன்ற மிருகங்கள் உதவியுடனும் படகுகள் மூலமும், பயணிக்க வேண்டும்.
தங்கம் தோண்டி எடுக்கும் கருவிகள், பல மாதங்கள் காட்டுப்பகுதியில் தங்கியிருக்க தேவையான உணவு, தங்கும் கூடாரங்கள் என்று சுமார் ஒரு ஆளுக்கு 200முதல், 300 கிலோ வரை எடுத்து செல்ல வேண்டியதாயிருந்தது. இவ்விதம் பல இன்னல்களை கடந்து, பல மாதங்கள், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தங்கம் கிடைக்கும் இடத்தை சென்றடைய வேண்டியதாயிருந்தது.
நாமும் கூட ஒரு பிரயாணத்தை மேற்கொண்டிருக்கிறோம். பொன்னாலான வீதிகள் நிறைந்த, 12 வகை விலையேறப்பெற்ற கற்களை அஸ்திபாரமாக கொண்ட மோட்சத்தை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். வழியில் எத்தனையோ பிரயாசங்கள், பாடுகள், இன்னல்கள் என்று சந்தித்து கொண்டே சென்று கொண்டிருக்கிறோம். ‘சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்’ என்ற வசனத்தின்படி பாடுகளின், உபத்திரவங்களின் வழியாய் நடந்து தான் நாம் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டி இருக்கிறோம்.
சிலுவைக்குப்பின் சிங்காசனம் போன்று பாடுகளுக்குப்பின் நமக்கு பரலோக இராஜ்யம் காத்திருக்கிறது. ‘உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்’(யோவான் 16:33) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? பாடுகளே இல்லாதபடி ஒருவருக்கும் வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் பாடுகளின் நடுவிலும் நாம் கர்த்தரை மறுதலிக்காதபடி, அவரையே பற்றி கொண்டு செல்லும்போது. பாடுகளை கடந்து பரம கானானை நாம் சுதந்தரிக்க முடியும். ஆமென் அல்லேலூயா!
போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
இயேசு நல்லவர் இயேசு வல்லவர் 
என்றென்றும் மாறாதவர்
ஜெபம்: எங்கள் அன்பின் பரம தகப்பனே, உலகத்திலே துன்பங்கள் உண்டென்றாலும், பாடுகள் உண்டென்றாலும், கர்த்தராகிய கிறிஸ்து எங்களோடு இருப்பதால் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர்களாக, பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்க கிருபை செய்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம். பாடுகளில் சோர்ந்து விடாதபடி கர்த்தரை பற்றி கொள்ள கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment