Saturday 1 October 2016

டேவிட் பிரனாய்ட் (1718 -1747)

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். – (சகரியா 4:6).

தங்கள் கிராமத்தின் மத்தியில் ஒரு வெள்ளை மனிதர் வந்து தங்கி, கூடாரம் போட்டிருக்கிறார் என்று அந்த கிராமத்தில் வாழும் செவ்விந்தியர்களுக்கு தெரிய வந்தது. அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு கூட்ட மக்கள் அவர் இருந்த கூடாரத்திற்கு வந்தார்கள். அந்த மனிதர் ஒருவேளை துப்பாக்கியோ மற்ற ஆயுதங்களோ வைத்திருக்கலாம் என்று எண்ணி, சத்தமில்லாமல் மெதுவாக அவர் இருந்த கூடாரத்தை சுற்றி வளைத்தார்கள்.
அவர்கள் எட்டிப்பார்த்தபோது, அந்த வெள்ளை மனிதர் முழங்கால் படியிட்டு, கண்கள் மூடியிருப்பதையும், தலை உயர்த்தப்பட்டு, ஏதோ முணுமுணுத்துக்
கொண்டிருப்பதையும் கண்டார்கள். என்ன செய்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த போதே, அவருக்கு முன்னால், ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டிருப்பதை கண்டார்கள். அந்த பாம்பு அவரை கொத்தி, இப்பொழுது அவர் மரித்து விழுவார் என்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்த பாம்பு கொஞ்ச நோரம் அப்படியே இருந்துவிட்டு, பின் தான் வந்தவழியே போய் விட்டது. நடந்த ஒன்றும் அந்த
மனிதருக்கு தெரியாது. ஆனால் அதை கவனித்து கொண்டிருந்த செவ்விந்தியர்கள் ஒன்றும் பேசாமல் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி போய் விட்டார்கள்.
அடுத்த நாள் வெள்ளை மனிதராகிய டேவிட் பிரனாய்ட் செவ்விந்தியர்களை பேசும்படி அணுகியபோது, அவர் மேல் அவர்களுக்கு இருந்த கோபம் தணிந்திருந்தது. முற்றும், பாம்பு சம்பவத்தை அவர்கள் தங்கள் கிராமத்தில் அனைவருக்கும் அதற்குள் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த வெள்ளை மனிதனுக்குள் இருக்கும் ஆவி மிகவும் வல்லமையுள்ளது என்றும் பேசிக் கொண்டார்கள்.
1743 ஆம் ஆண்டு, டேவிட் பிரெனாய்ட் அவர்கள் தனது 25ஆவது வயதில் ஸ்காட்லாந்து மிஷனெரி சங்கத்தால் அமெரிக்காவிற்கு மிஷனெரியாக அனுப்பப்பட்டார். அவர் டிபி வியாதியால் தாக்கப்பட்டிருந்ததால், அடிக்கடி இரத்த வாந்தி எடுத்து, மிகவும் பெலவீனமாயிருந்த போதிலும், அவர் தனக்குள்ளிருந்த வல்லமையான பரிசுத்த ஆவியானவரால், அநேக செவ்விந்தியர்களை கர்த்தருடைய அன்பிற்குள் கொண்டு வந்த பாத்திரமாக செயல்பட்டார்.
அவருடைய ஊழியம் நான்கு வருடங்களே ஆனபோதிலும், அவருடைய ஜெப வாழ்க்கையினாலும், தன்னுடைய தியாகமான வாழ்வினாலும், கர்த்தருடைய ஆவியானவர் அவருக்குள் இருந்து செயல்பட்டதினாலும், அநேகரை கர்த்தருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்த முடிந்தது. அவர் தனது 29ஆவது வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாலும், அவருடைய ஊழியத்தைக் குறித்து இன்றும் அநேகர் சொல்லும்படியாக அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது.
பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1கொரிந்தியர் 1:27) என்ற வார்த்தையின்படி பெலவீன பாண்டமாயிருந்த டேவிட் பிரனாயிடைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களை செய்ய முடியுமென்றால், கர்த்தருடைய பெரிதான பரிசுத்த ஆவியானவரை கொண்டுள்ள நம் ஒவ்வொருவரினாலும்,கர்த்தருக்காக பெரிய காரியங்களை நிச்சயமாக செய்ய முடியும்.
நம் பக்கத்திலிருந்து ஊக்கமான ஜெபமும், பரிசுத்த வாழ்க்கையும், தியாகமான வாழ்வும் இருக்குமென்றால், நிச்சயமாக நம்மாலும் கர்த்தருடைய ஆவியானவரின் ஒத்தாசையுடன் உலகத்தை அசைக்க முடியும். இந்த கடைசி நாட்களில் தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் அப்படிப்பட்டவர்களாக மாற்றுவீராக. முழங்காலில் நின்று ஜெபிக்கும், ஜெயிக்கும் கிறிஸ்தவர்களாக நாம் மாறுவோமாக! ஆமென் அல்லேலூயா!
எந்தன் பெலவீன நேரங்களில்
உந்தன் பெலன் என்னை தாங்கிடுதே
மாறிடாத என் நேசரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சக தேவா உம்மை ஆராதிக்கின்றோம்
ஜெபம் : எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, டேவிட் பிரனாயிட் போன்ற பரிசுத்தவான்களை எழுப்பி, அவர்கள் மூலம் தேசங்களை சந்தித்த உம்முடைய கிருபைக்காக நன்றி செலுத்துகிறோம். இந்த நாட்களிலும், முழங்காலில் நின்று ஜெபிக்கிறவர்களாக, உலகத்தை அசைக்கிறவர்களாக எங்களையும் மாற்றும். பெலவீனமாயிருந்தவர்களையும், பலப்படுத்தி, அவர்கள் மூலம் பெரிய காரியங்களை செய்ய வல்லவராயிருக்கிற உம்முடைய கரத்தில் எங்களை படைக்கிறோம். எங்கள் பெலவீனங்களை நீக்கி, உமக்காக உழைக்க, வாழ தகுதிப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment